பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

37

சேரமன்னர், சேரமான் பெருமாள் நாயனாரும், அவரது தோழர் சுந்தரமூர்த்தி நாயனாரும் நாட்டில் செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்த பின்னர், கயிலாயம் நோக்கிப் புறப்பட்டனர். இருவரும் சென்றனர் யானைமீதும், குதிரை மீதும் ஏறிக்கொண்டு. செல்லும் வழியில் ஒளவையைக் கண்டனர். அந்த அம்மையையும் உடன் வர அழைத்தனர். அம்மையோ அப்போது விநாயகருக்குப் பூசை செய்து கொண்டு இருந்தார். நண்பர் களுடன் எளிதாகக் கயிலாயம் செல்லலாமே என்ற ஆசை ஒளவையாருக்கு. ஆதலால் விரைவிலேயே பூசையை நடத்திவிட முனைந்தார். ஒளவையாரின் அவசரத்தை அறிந்த பிள்ளையார் 'ஏன் பாட்டி! இத்தனை அவசரம் இன்று?’ என்று கேட்டார். விஷயத்தைச் சொன்னார் ஒளவையார். 'அடடா அதுதானா? உன் நண்பர்களைப் போகச் சொல். அவர்கள் அங்கு செல்லுமுன் நான் உன்னைக் கைலாயம் கொண்டு சேர்க்கிறேன் என்றார். அவசரப்பட்ட சேரமானும் சுந்தரரும் சென்று விட்டார்கள். அம்மையும் நிதானமாகவே பூசை செய்தார். பூசை முடிந்ததும் அப்படியே அம்மையைத் தன் தும்பிக்கையாலேயே அநாயசமாகத் தூக்கி, கயிலாயத்திலே இறக்கி விடுகிறார் பிள்ளையார். ஒளவையாரும் கைலாய வாசலிலே நின்று முன் சென்ற சேரமானையும், சுந்தரரையும் வருக! வருக!' என வரவேற்கிறார். 'எப்படி இந்த ஒளவையார் தமக்கு முன் கயிலாயம் வந்து சேர்ந்தார்?’ என்று அறியாது திகைத்தனர் இருவரும்.

ஆம், பிள்ளையாரைப் பின் பற்றினால் கயிலாயம் சேர்வது எளிதாகவும் இருக்கும். விரைவாகவும் நடக்கும் என்று தெரிந்தனர், அவர்கள் இருவரும் அன்று. அதையே நாமும் தெரிந்து கொள்கிறோம் இன்று.