பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



44

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

H.கிருஷ்ண சாஸ்திரி எழுதியிருக்கும் 'தென்னிந்தியக் கடவுளரும் அவர்களது துணைவியரும் என்ற புத்தகத்தில் இந்த வடிவத்தின் படம் இருந்தது. சரி கிடைத்து விட்டது என்று துள்ளிக் குதித்து விளக்கத்தைப் படித்தால் என் நண்பர்கள் சொன்னபடி அது அர்த்தநாரீஸ்வர வடிவம் என்றே எழுதி இருந்தது. இதைப் பார்த்து நண்பர்கள் குதுகலிப்பார்கள் என்று நினைத்தேன். நான் நினைத்ததற்கு மாறாக அவர்களும் என்னுடன் சேர்ந்து, இந்த விளக்கமும் சரியானதில்லை, தப்புத்தான் எனறாாகள.

அதன் பின் விளக்கங்கள் வேண்டி சரஸ்வதி மகால் அர்ச்சகரைக் கேட்டேன். சுவாமி மலையில் உள்ள சிற்பக் கலைஞர்களைக் கேட்டேன். நான் எடுத்த புகைப் படத்தையும் காட்டிக் கேட்டேன். எல்லோருமே பரக்கப் பரக்க விழித்தார்களே ஒழிய, சரியான விளக்கம் சொல்பவர்களைக் காணோம்.

இப்படியே நானும் பல நாளாய் மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்து விட்டு, கடைசியில் 'இது ஒரு புரியாத புதிர்' என்றே விட்டு விட்டேன். தேவர் மூவர் என்பது போல தேவியர் மூவர். அவர்களே கலைமகள், அலைமகள், மலைமகள் எனப்படுவர் என்பதை அறிவோம். இம்மூவரும் சேர்ந்து இணைந்த வடிவமே பராசக்தியின் வடிவம் என்று அறிஞர் கூறக் கேட்டிருக்கிறேன். இப்பராசக்தியே, தேவர் மூவருக்கும் தேவியர் மூவருக்கும் மேலான ஒரு சக்தி வாய்ந்த தெய்வம் என்றும் விளக்கங்களாக படித்திருக்கிறோம். இப்படி எண்ணங்களைச் சுழல விட்டுக் கொண்டிருக்கும் போது நான் முன்னர் எப்போதோ படித்த பாட்டு ஒன்று என் ஞாபகத்திற்கு வந்தது.