பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



48

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

என்றே முடிவு கட்டி விடுகிறாள். அப்படி எல்லாம் பேசியவள்தான், கடைசியாக. அந்தக் காதல் நோயை - இருவரும்

உள மறிந்த தன்றி மற்று இவ்

ஊரறிந்த தில்லையே,

என்று முடிக்கிறாள் - உண்மைதானே! காதலை கைக்குள் அடக்கிக் காட்டிவிட முடியுமா, இதோ அதைப் பாருங்கள் என்று. அதன் காதைப் பிடித்து திருகி. எல்லோருக்கும் காதல் என்றால் என்னவென்று தெரியும். என்றாலும் ஒருவர் கண் முன் கொண்டு வந்து நிறுத்திவிட முடியுமா? இல்லை. அதைப் போலத்தான் இருக்கும் என்று உவமையாவது கூறி விளக்க முடியுமா? முடியாது தானே. அதன் தன்மையை இருவர் உள்ளம் மட்டுமே அறியும். ஊரார் அறிவது என்பது சாத்தியமா என்ன?

அப்படி அறிந்து விட்டால் அதைப் பற்றிதான் இத்தனை பேச்சேது? அதனைச் சுற்றிச் சுற்றி இத்தனை காவியங்கள் எழுவது ஏது? இதை யெல்லாம் தெரிந்து தானோ என்னவோ காதல் கடவுள் காமனையும் உருவமில்லாத ஒருவன் என்று வர்ணித்து விட்டார்கள் கவிஞர்கள். இப்படி உருவமில்லாத ஒருவன் சும்மா இருக்கிறானா என்றால், அதுவும் தான் இல்லையே.

தென்றல் தேரில் ஏறிக் கொள்கிறான். கரும்பை வில்லாய் வளைக்கிறான். மலர் அம்பை விடுகிறான். இரண்டு இதயங்களைச் சேர்க்கிறான். இல்லை ஒருவரது இதயத்தை மற்றொருவரிடமிருந்து பிரித்து இருவரையும் துடிதுடிக்க செய்கிறான். உருவமில்லாத போதே இத்தனை செய்கிறானே. அவனுக்கு உருவமும் இருந்து விட்டால்!