பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

55


பண்ணைக்கு ஒருவன் எனப் போந்தேன்
ஏவல், கூவல் பணி செய்வேன்

இப்படி அடங்கி ஒடுங்கிப் பேசும் அனுமன் பேரில் தான், ராமனும் சுக்ரீவனும் எத்தனை நம்பிக்கை வைத் திருக்கிறார்கள். தென்திசை நோக்கிச் செல்லும் அனுமன், சீதையை, சீதை இருக்கும் இடத்தைக் கட்டாயம் கண்டு வருவான் என்று நம்புகிறான் காகுத்தன். ஆனால் அனுமனுடைய ஆற்றலை எல்லாம் நன்கு அறிந்த அந்த கவி குலக் கோமகனாகிய சுக்ரீவனோ, சீதையைக் கண்டு விட்டால், சும்மா வெறுங்கையோடு வரமாட்டான், கொண்டு வந்து விடுவான் என்றே நம்புகிறான்.

ஆனால் இதே நம்பிக்கை சீதைக்கு முதலில் அனுமனிடம் உண்டாக வில்லை. இத்தகைய சிறிய உருவம் படைத்த அனுமன் எப்படி இந்த கடலைக் கடந்தான் என்று சந்தேகிக்கிறாள். அனுமனோ நான் இக்கடலை கடந்தது காலினால்தான்' என்று விளக்குகிறான். சீதைக்கோ அதிசயத்திலும் அதிசயமாகத் தோன்றுகிறது. சீதையின் சந்தேகத்தை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டிருக்க விரும்பவில்லை அனுமன்.

அதுவரை அடங்கி ஒடுங்கி நின்ற அனுமன் தன் விசுவ ரூபத்தையே காட்டுகிறான். அனுமனோ பெரிய யோகி, அதனால் பல சக்திகள் வாய்ந்தவன். ஆதலால் அவன் விண்ணிற்கும் மேலே விரிந்திருக்கும் வான் முகட்டையும் முட்டும் வகையில் உயர்ந்த உருவம் உடையவனாகி விடுகிறான்.

இப்படி அண்ட முகடு அளவும் வளர்ந்தவனைக் கண்டு அன்று உலகெலாம் அளந்த நாயகனான திரி விக்கிரமனுமே நாணம் அடைகிறான், தன்னால் இவ்வளவு பெரிய உருவை அன்று எடுக்க முடியாது போயிற்றே என்று.