பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

65

சொல்லப்போனால் இடுப்பிற்கு கீழே உள்ள கால்கள் கொஞ்சம் அளவுக்கு மீறி நீண்டிருந்தது போல் தோன்றிற்று, எனக்கு. ஆனால் முழங்காலுக்கு மேலே அவளது வடிவம் மிக்க வனப்புடையதாக இருந்தது. கையில் தாமரை மலர் ஒன்று ஏந்தி அவள் எழிலாக நிற்கிற கோலம் கண் கவர் வனப்புடையதாக இருந்தது. அவளையும் என் காமிராவுக்குள் அடைத்துக் கொண்டு வந்து உங்கள் முன் நிறுத்தி யிருக்கிறேன்.

இத்துடனும் நான் திருப்தி அடையவில்லை என்னுடைய லகஷ்ய செளந்தர்ய தேவியான ஆண்டாளை யான் இன்னும் காணவில்லை என்றே ஏங்குகிறது என் உள்ளம். மணம் செய்துகொண்டு நின்ற கோலம் இன்னும் எவ்வளவோ அழகுடையதாக இருந்திருக்க வேண்டும் என்றே என் உள் உணர்வு சொல்லிற்று. ஆதலால் கோதையின் அழகிய கோலத்தை தேடித்திரியும் பணியை நிறுத்தவில்லை. திருக்கோயிலுக்கு மேற்கே பெண்ணை நதிக் கரையில் ஒரு திருவரங்கம் இருக்கிறது என்றார்கள். அந்தக் கோயிலைக் காண சென்றேன்.

அங்கே பெரிய ஆகிருதியாய் இருபத்தி நாலு அடி நிலத்தில் அனந்தன் மேல் துயிலில் அமர்ந்திருக்கும் அரங்கனைக் கண்டேன். நல்ல அழகனாக உருப் பெற்றிருக்கும் அவனை வந்தித்து வணங்கினேன். அங்குள்ள சுற்றுக் கோயில்களை எல்லாம் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒரு சிறு சந்நிதியிலே செப்புச் சிலை வடிவில் நிற்கும் ஆண்டாளைக் கண்டேன். சுமார் மூன்றடி உயரமே உடையவளாக அவள் நின்றாலும், அவள் பாசுரங்களில் கண்ட அழகையெல்லாம் அவள் வடிவிலேயும் காண முடிந்தது. -

தலையைக் கோதி முடித்துக் கொண்டையிட்டு நிற்கும் அழகைச் சொல்வதா? இல்லை வலக்கையை உயர்த்தி

அ.பெ.அ.நெ-5