பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



74

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

எழுந்து பரி மாறுவதற்கே மிக்க சிரமப்படுபவளாகத்தான் இருக்கிறாள்.

காஞ்சி காமாக்‌ஷி கோயிலில் அவள் சந்நிதிக்குப்பின்புறம் அன்ன பூரணி ஒரு சிறிய வடிவில் இருக்கிறாள். அவள் இருக்குமிடத்தில் இருட்டடித்து வைத்திருப்பதன் காரணமாக அவளது அழகையும் அன்பையும் நம்மால் அனுபவிக்க முடிகிறதில்லை. ஆனால் நான் உங்களை எல்லாம் அழகே உருவான அன்னபூரணி ஒருத்தி இருக்கும் இடத்துக்கே அழைத்துச் செல்ல விழைகின்றேன்.

அந்த அன்னபூரணி இருக்கும் இடம்தான் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். அந்தக் கோயில் வாசலில் நுழைந்ததும் நம் கண்முன் வருவது ராஜகம்பீர மண்டபம். அந்த மண்டபத்தின் உள்பக்கத்தில் மேற்புறத்துச் சுவரில் ஒரு சிறிய மாடத்தில் கிழக்கு நோக்கியவளாய் நிற்கிறாள் அவள்.

நான்கு அடி உயரமே உள்ள நல்ல கருங்கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள். மக்கள் பசிப்பிணி ஆற்றும் ஆர்வம் அவள் முக விலாசத்தில் தெரிகிறது. அவள் உதடுகளில் அரும்பும் இளநகை நமது பசியையே மறக்கச் செய்கிறது. இடக்கையில் அமுத கலசம் ஏந்தி நிற்கும், இந்த அன்னபூரணி உலகையே புரக்கப் புறப்பட்டவள்தான் என்று தோன்றுகிறது. அவளைக் காணும் போது, அம்மா தாயே, நீ மூடி வைத்திருக்கும் அமுத கலசத்தை திறந்து விரைவிலே மக்கள் பசியும் பிணியும் இன்றி வசதியும் வளமும் பெற்று வாழ வகை செய்வாய் அம்மா' என்று பிரார்த்திக்கவே தோன்றுகிறது எனக்கு. கலை உலகில் இவளை செளபாக்கிய சுந்தரி என்றும் அழைக்கிறார்கள். மக்கள் பசி அகற்றிவிட்டால் மற்ற செளபாக்கியங்கள் எல்லாம் விரைவிலேயே வந்து விடாதா என்ன?