பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

75

உலக மக்களது பசியகற்றுவது இந்த அன்ன பூரணி என்றால், அந்தக் காத்தற் கடவுளாய மகா விஷ்ணுவின் வேலை பாதிக்கும் மேல் தீர்ந்து விடுகிறதே என்று கேட்கத் தோன்றும். வெறும் உண்டியும் உடையும் மட்டும் மனிதனது தேவை என்றில்லை. எத்தனை எத்தனையோ பொருள்களுக்கு அல்லவா ஆசைப்படுகிறான். அந்த ஆசையை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டியவளும் அவள் தானே.

அந்த நிலையில்தான் தன் அண்ணனான அந்தப் பரந்தாமனுக்கும் நல்ல பக்கத் துணையாக நிற்கிறாள். அவன் ஏந்திய சங்கையும் சக்கரத்தையுமே அவனிடமிருந்து பெற்று மக்களுக்கு எல்லாம் அபயம் அருளுபவளாய் நிற்கும் அந்த அன்னையையே நாராயணி என்கிறார்கள் கலைஞர்கள். இந்த நாராயணியை எல்லாக் கோயில்களிலும் காண முடியாது. அவளது வடிவில் சிறந்தது ஒன்று தஞ்சைக் கலைக் கூடத்தில் இருக்கிறது. ஏதோ சாந்த சொரூபியாக இருப்பவளே யானாலும் காத்தல் தொழிலுக்கேற்ப கருணை நிறைந்தவளாகவே காட்சி தருகிறாள்.

இப்படி அண்ணன் வேலையில் மட்டும் தான் இவள் பங்கு பெறுகிறாள் என்றில்லை. காதல் ஒருவனை கைப் பிடித்து அவள் காரியம் யாவினும் கை கொடுத்து நிற்கும் தமிழ்ப் பெண் குலத்தில் பிறந்தவள் ஆயிற்றே. ஆதலால் இறைவனுடைய காரியங்களுக்கும் சக்தி தருபவளும் அவளாகத்தானே இருக்க வேண்டும். அப்படி சக்தி அருளுபவளாக இருக்கும் அன்னையையே போக சக்தி என்று வடிக்கவும், நம் கலைஞர்கள் மறக்கவில்லை. சோழ நாட்டில் உள்ள சிவத்தலங்களில் எல்லாம் கருவறையிலே லிங்க உருவில் இருக்கும் இறைவன் பக்கலிலேயே