பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

77

ஆனந்த ரூப மயிலாக இருக்கிறாள் என்கிறார் தாயுமானவர். தாயும் ஆனவனே அன்னையின் கன்னித் தன்மையைக் கூறிவிட்டார் என்றால் அதன் மேல் அப்பீல் ஏது. இந்தக் கன்னியாம் அன்னையைக் காண ஒரு நடையே நடக்கவேணும். நீலத்திரைக் கடல் ஒரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரியைக் காண வேண்டும். இவளை மணம் புரிய வந்த இறைவன் கூடக் கடைசியில் ஏமாந்தல்லவா திரும்பியிருக்கிறார்.

கையில் அக்க மாலை ஏந்தி நிற்கும் அவளது தவக்கோலம்தான் எத்தனை அழகு வாய்ந்தது. பெண்ணாய்ப் பிறந்து தாயாய் பேறு பெற்று வாழ்வது சிறந்தது தான் என்றாலும் கன்னியாகவே இருந்து உலகுயிர் அனைத்துக்கும் அருள் புரிவது என்பது எளிதான காரியமா என்ன?

அந்த அரிய காரியங்களை கன்னிக்குமரி செய்கிறாள் என்று கற்பனை பண்ணியிருக்கிறார்கள் கலைஞர்கள். உலகெல்லாம் காக்கும் ஒரு தனிக்கடவுளை அன்னையாகவும் கன்னியாகவும் கற்பனை பண்ணத் தெரிந்த கலைஞர்கள் நம்மவர் என்று அறிகிற போது தமிழனாகப் பிறந்த நாமும் பெருமிதம் அடையலாம் தானே.