பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்

தாங்கித் தங்கள் மானம் காக்க விரைகிறார்கள். இத்தனையும் நடக்கிறது ஒரு நாடகமாக, இந்த நாடகத்தைச் சொல்லில் வடித்தார் ஒரு கவிஞர்.

அடியில் தொடுத்த பாதுகையும்
அமைந்த நடையும் இசைமிடறும்
வடிவில் சிறப்ப நடந்தருளி
மூழை ஏந்தி, மருங்கணைந்த
தொடியில் பொலி தோன் முனி மகளிர்
சுரமங்கையரை மயல் மூட்டி
படியிட்டு எழுதாப் பேரழகால்
பலிதேர் பகவன் திரு உருவம்

என்று இத்தனை நாடகத்தையும் கல்லில் வடித்தான் ஒரு சிற்பி. இந்தச் சிற்ப நாடகத்தைக் காண விரும்புபவர்கள் எல்லாம் நேரே தஞ்சாவூருக்கே செல்ல வேண்டும். அங்கு அரண்மனைக்குள் அமைந்திருக்கும் கலைக் கூடத்தைச் சென்று காண வேண்டும். கலைக் கூடத்தின் தென் பகுதியில் இந்த நாடகம் நடந்து கொண்டிருக்கும்; காட்சி ஜோடனைகள் மாறாது. எப்போதும் நிரந்தரமாகவேயிருக்கும்.

அந்த நாடகக் காட்சி, கலை நுணுக்கம் தெரிந்தவர்கள் காதுகளில் எல்லாம் துடி ஒலிக்கும் ஓசையே! கேட்கும். படியிட்டு எழுதாப் பேரழகு நிறைந்த அந்த கங்காளன் திரு உருவத்தையே நோக்கிக் கொண்டிருந்தால் ஒரு வேளை நாமும், அந்த முனிமகளிரைப் போலவே, கல்லாகவே அங்கு நின்று விடுவோமோ என்னவோ? அதைத் தடுக்கவா வது, அழகன் பேரில் வைத்த கண்ணை எடுத்து, அந்த அழகிகளின் அங்க அவயவங்களில் எல்லாம் காணும் அந்த அற்புதமான உணர்ச்சியை உணர்ந்து மகிழலாம். நிறைந்த மனத்தோடு வீடும் திரும்பலாம்.