பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்


என்றெல்லாம் பாட முடிகிறது அவரால், உண்மை தானே. நாம் கண்ணாலே காண்பதெல்லாம் களிறையும் பிடியையும் மயிலையும் பேடையையும் தான். அறிவைத் துணைக் கொண்டு நோக்கி ஆண் பெண் இரண்டு பெரிய தத்துவங்கள் அந்த உயிர் பிராணிகளிடத்தே அடங்கிக் கிடப்பதையும் கூடக் கண்டு விடலாம்.

ஆனால் அவன் அருளே கண்ணாகக் கொண்டு பார்க்கும் போதுதான் சிவமும் சக்தியும் ஒன்றி நின்று, ஒவ்வொரு உயிர்த்தத்துவத்திலும் காட்சி கொடுப்பதைக் கண்டு விடுகிறார் அப்பர். கண்டு அறியாதன எல்லாவற்றையும் கண்டு எக்களிப்புடன் கூறுகிறார் நமக்கு. நமக்கு அந்த அனுபவம் எல்லாம் சித்தியாகவா போகிறது.

ஒரு கோயிலுக்குப் போகிறோம், இரண்டு நண்பர்களுடன். கொஞ்ச தூரத்தில் போகும் போதே கோயில் மதில், கோபுரம், விமானம் எல்லாம் தென்படுகிறது. காட்சியில் மட்டும் நம்பிக்கை வைத்துள்ள நண்பர் சொல்கிறார். என்ன! எல்லாம் கல்தானே கல்லால் கட்டிய கோயிலுக்கு என்ன இத்தனை முக்கியத்துவம் என்கிறார்.

நாம் சொல்கிறோம், இல்லை, கோயில் வெறும் கல்லில்லை - அந்தக் கல்லிலே தான் எத்தனை எத்தனை சிற்றுளி வேலைகளின் நயம். கோபுரத்தின் ஒவ்வொரு பகுதியும் - விமானத்தின் ஒவ்வொரு அடுக்கும் - அந்தக் கோயிலை உருவாக்கிய சிற்பியின் கலைத்திறனை அல்லவா பறை சாற்றுகின்றது. அங்கு கல்லையா பார்க் கிறோம். கல்லில் உருவான கலையையே அல்லவா காண்கிறோம் என்கிறோம் நாம்.