டாக்டர். சி. பா.
107
வைகறைக் காலத்தே நறுமணங் கமழும் அழகிய கூந்தல்களையுடைய ஆய்ச்சியர் கழுத்தில் கோத்துக் கட்டிய தங்கக் காசுகளும் குண்டுகளும் (காசு என்ற அச்சுத்தாதியும், பிறப்பு என்ற ஆமைத் தாலியும்) கலகலவென்று ஒலி செய்ய, கை சலிக்க மத்தினால் ஒசை செய்து கடையும் தயிரின் ஒசை கேட்க நிற்கின்றனர்.
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ
-திருப்பாவை : 7
கிழக்குத் திசையில் வானம் வெளுத்தது. ஆகவே எருமைகள் மேய்ச்சலை முன்னிட்டுச் சிறிது நேரம் அவிழ்த்துவிடப் பட்டதால் எங்கும் பரவிச்சென்றன. மார்கழி நீராட்டத்தில் அக்கறையுள்ள மகளிரும் நீர்நிலைகள் நோக்கிச் செல்லத் தொடங்குகின்றனர்.
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றார்.
- திருப்பாவை : 8
இளம் கன்றுகளுடைய எருமைகள் கனைத்துக் கொண்டு, அம்மாவென்றலரும் கன்றுகள்பால் இரக்கப்பட்டு, தங்கள் தங்கள் கன்றுகளை நினைந்த அளவிலேயே முலைக்காம்புகள் வழியே பாலைச் சுரப்பதனால், அப்பால் நனைத்து அம்மண் வீடுகளைச் சேறாக அடித்து விடுகின்றன. அத்தகு நிரம்பிய செல்வத்தைக் கொண்டவர்களாக ஆயர்கள் திகழ்கின்றார்கள்.