பக்கம்:ஆண்டாள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண்டாள்
1
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

மார்கழித் திங்களில் சைவர்கள் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்டாவை படிப்பதும் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு நிலவிவரும் வழக்கமாகும். ஆண்டாள் இயற்றிய திருப்பாவையில் முப்பது பாக்கள் இருக்கின்றன. இவை நெஞ்சை அள்ளும் உணர்ச்சி மிக்கவைகளாய் இருப்பதோடு படிக்குந்தோறும் படிக்குந்தோறும் ஆரா இன்பம் மாறாது அளிக்கும் இறைநெறிப் பாடல்கள் ஆகும். திருப்பாவையில் இறைவனோடு உயிர் மணந்து கொள்ளு தலையே ஆண்டாள் கற்பனையாக அழகுறப் பாடியுள்ளார்.

"கடவுள் நெறி கொள்ளின், காதல் நெறியில் உயிர்கள் செல்ல இயலாது" என்று சிலர் வாதிடுவர்; "காதல் கடவுள் நெறிக்கு முற்றிலும் மாறுபட்டது" என்றும் கூறுவர்; "கடவுளை அடைய வேண்டுமாயின் காதலை அறவே கைவிட வேண்டும்" என்பர். வேதாந்திகள் உலகம் அனைத்தும் மித்தை என்று காட்டி, "பெண்ணாகியதொரு மாயப் பிசாசம்" என்று கடப் பெண்களை நிந்திப்பார்கள், (பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், வையைத் தமிழ், ப. 101) என்னும் கருத்துகள் ஆழ்வார்கள் போக்கில் அடிபட்டுப் போகின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் பெருக்கெடுத்தோடிய பக்தி வெள்ளம், நிலையாகத் தன் பயனை உலகிற்கு அளித்துள்ளதைக் காணுகின்றோம். சைவ, வைணவ பக்தி இயக்கங்களினால் தமிழ்ப் பூங்காவில் மலர்ந்த முல்லை மலர்களே 'பக்திப் பாடல்கள்" ஆகும். அப் பாடல்கள் முழுமுதற்பொருளைக் காண்பதற்கு மக்களினம் ஆர்வத்தோடு முயன்ற முயற்சிகளுள் தலைசிறந்த ஒன்றை அழியாது போற்றிக் காத்து வருகின்றன:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/11&oldid=565236" இலிருந்து மீள்விக்கப்பட்டது