பக்கம்:ஆண்டாள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

128


மேலும் ஆண்டாள் "குலத்தைத் தள்ளி ஞானத்தையே கொள்ளுதல், உயிரை உரமுறச் செய்ய இயற்றும் நோன்பில் களையறுத்தல், காதல் மனத்திற்குக் கால்கோள் செய்தல், இறைவனை இயற்கை அர்ச்சைகளின் வாயிலாக வழிபட்டுப் பிறவிப் பயனை எய்துதல் ஆகிய இவற்றுள் தேர்ந்த சீர் திருத்தத்தைத் தெளித்துத் தெளித்துக் காட்டுவதாகப்" பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார் பகர்வர் (பெரியாழ்வார் பெண்கொடி : ப. 174).

இவ்வாறாகப் பாவை பாடிய பாவையராகத் திகழும் ஆண்டாள் தாம் இயற்றிய திருப்பாவை முப்பது பாடல்களையும் சங்கத் தமிழ் மாலை என்று சாற்றுகின்றார். இம்முப்பது பாடல்களையும் நாள்தோறும் தவறாமற் பாடும் திறம் பெற்றவர்கள் "ஈரிரண்டுமால் வரைத்தோள், செங்கண் திருமுகத்துச்செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்” என்று உறுதியாகப் பறை சாற்றுகின்றார், 'பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை' என்ற தொடரும், 'திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே' என்ற தொடரும் உன்னி மகிழத் தக்கனவாம்.

எங்கும் பரந்திலங்கும் எம்பெருமானின் எளிய இனிய பெற்றியினை அழகும் அருமைப்பாடும், உறுதியும் உயர்வுங் கூட்டும் ஒப்பற்ற தமிழால் திருப்பாவை என்னும் திவ்விய நூலாற் காட்டிய திருவாடிப்பூரத் துதித்த ஆண்டாளின் தமிழ், அகிலம் உள்ள வரை நின்று நிலைபெறும் பெற்றித் தாகும்.

பாதங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேத மனைத்துக்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/125&oldid=1462127" இருந்து மீள்விக்கப்பட்டது