பக்கம்:ஆண்டாள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
கோதில் தமிழ் உரைத்த கோதை


"மொழி என்பது எண்ணங்களை ஏற்றிச் செல்லும் வண்டி” (Language is a vehicle of thought) என்பர் வெண்டிரி என்னும் மொழி நூலறிஞர். இது குறித்தே "மொழியின் வாயிலாக வாழ்க்கையை வடித்துக் காட்டுவதே இலக்கியம்" (Literature is thus fundamentally an expression of life through the medium of language) என்று வில்லியன் ஹென்றி ஹட்ஸன் என்னும் மேற்புல அறிஞரும் சுட்டு வாராயினர். இவ்வாறு மேனாட்டறிஞர்கள் மொழியையும் இலக்கியத்தையும் எடுத்துக் கொண்டாலுங் கூடத் தமிழர்க்கு, மொழியெனப்படுவது கருவியாக மட்டும் இல்லாமல் உயிராகவும் உயிர்க்குயிராகவும் துலங்கக் காணலாம்.

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்1

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களும் பகர்ந்திடக் காண்கிறோம். இக்காலத்திற்குச் சற்று முற்காலத்தே வாழ்ந்த ‘தமிழ்விடுதூது’ ஆசிரியர் அவர்களும்,

இருந்தமிழே உன்னால் இருந்தேன் - இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்2

என்று இயம்பியிருக்கக் காணலாம். பதினேழாம் நூற்றாண்டின் பெரும்புலவராய்த் திகழ்ந்த குமரகுருபரர் தமிழை இறைவனோடு இணைத்துப் பேசியிருப்பதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/126&oldid=1462128" இலிருந்து மீள்விக்கப்பட்டது