பக்கம்:ஆண்டாள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

125


"பழமறைகள் முறையிடப் பைந்தமிழின் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலே" என்று அவர் திருமாலின் ஆராத தமிழ்க் காதலை அளவிட்டுக் காட்டினார். இடைக் காலத்தே வாழ்ந்த குன்றை முனிவரரும், தெய்வப்புலமை மிக்கவரும், பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவிவல வருமான சேக்கிழார் பெருமான்,

ஞான மளந்த மேன்மை தெய்வத் தமிழ்

என்று தமிழைத் ‘தெய்வத் தமிழ்’ என்று தெளிவுபடக் குறிப்பிட்டார். கவிச் சக்கரவர்த்தி கம்பநாடரும் அகத்திய முனிவரைக் குறிப்பிடும்பொழுது,

தமிழெனும் அளப்பரும் சலதி தந்தவன்

என்றும்,

என்றுமுள தென்றமிழை இயம்பி இசை கொண்டான்3

என்றும் தமிழிற்குத் தனிப்பெருமை சாற்றிக் குறிப்பிட்டிருக்கக் காணலாம். கோதில் தமிழுரைத்த கோதையாம் ஆண்டாளும் தாம் பாடியருளிய திருப்பாவையின் இறுதிப் பாடலில் தாம் பாடிய பாசுரங்கள் அனைத்தையும் "சங்கத் தமிழ்மாலை' என்னும் பெயரிட்டு அழைக்கிறார். மேலும் அவர் திருப்பாவையின் முப்பது பாடல்களையும் தப்பாமற் சாற்றுவோர் திருமாலின் அருளுக்கு இலக்காகி எங்கும் எப்போதும் அவர்தம் திருவருள் பெற்றுத் திகழ்வர் என்றும் எடுத்துரைக்கின்றார்.

இதுபோன்றே தாம் பாடிய நாச்சியார் திருமொழியின் ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் தமிழைச் சிறப்பித்தும், அத்தமிழை உகக்கும் திருமாலைச் சிறப்பித்தும் அவர் பாடியிருக்கக் காணலாம். அவை வருமாறு :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/127&oldid=1462129" இருந்து மீள்விக்கப்பட்டது