பக்கம்:ஆண்டாள்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
130
ஆண்டாள்
 


அவரைப் பிராயர் தொடங்கி என்றும்
ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்து
தொழுதுவைத் தேன்ஒல்லை விதிக்கிற்றியேல் 20

என்று குறிப்பிட்டிருக்கக் காணலாம். மேலும் இவர்,

மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே21

என்று உறுதி வாய்ந்த நெஞ்சத்துடன் உரைத்திருப்பதனை நோக்கும்பொழுது “ஆளுடை நாயகன் உறையும் கயிலை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” எனச் சூளுற வெடுத்த திருநாவுக்கரசர் பெருமானின் திண்ணிய நெஞ்சம் புலனாகின்றது. எனவே.

எண்னியார் எண்ணியாங் கெய்து எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் 22

என்னும் திருவள்ளுவர் திருக்குறளுக்கு ஒள்ளிய உருவாய்த் துலங்கும் கோதையார் தம் நெஞ்சவுறுதியைக் காண்கிறோம்.

முன்பே கண்டது போல நற்கணவன் என்னும் நற்பேற்றினை அடைய வேண்டித் தையொரு திங்களில் காமனைத் தொழுதல் வழக்காக அன்றிருந்திருக்கின்றது. அம்முறையில் நம் ஆண்டாள் நாச்சியாரும் "கண்ணனை இணக்கு' என்று கேட்டுக் காமனைக் கைதொழுகின்றார். தைமாதம் முழுவதும் தரையைப் பெருக்கித் தூய்மை செய்து: நீர் தொளித்துக் கோலமிட்டுப் புதுமணல் பரப்பித் தெருவினை அணிசெய்து காமனையும் அவன் தம்பி சாமனையும் கைதொழுது, சங்கு சக்கரக் கையனாகிய வேங்கடவ னுக்கு வாழ்க்கைப்பட வகை செய்ய வேண்டுமாய் வணக்கத்தோடு வேண்டுகோள் விடுக்கின்றார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/132&oldid=1157595" இருந்து மீள்விக்கப்பட்டது