பக்கம்:ஆண்டாள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

ஆண்டாள்


'கூடலிழைத்த'லுக்கு இப்படியும் ஒரு விளக்கமுண்டு.

முதற்பாடலில் திருமாலிருஞ்சோலையைச் சொல்லியவர் இரண்டாவது பாடலில் திருவேங்கடத்தையும் திருக்கண்ண புரத்தையும் குறிப்பிட்டிருக்கக் காணலாம். இப்பத்து முழுவதிலும் பெரும்பாலும் புராணக் குறிப்புகளே இடம் பெற்றிருக்கக் காணலாம். இரண்டாம் பாடலில் வாமனன் குறிக்கப் பெறுகிறார். மூன்றாம் பாடலில் தேவகி, வசுதேவர் இடம் பெற்றுள்ளனர். நான்காவது பாடலில் காளியன் என்னும் பாம்பின்மேல் நடம்புரிந்த பாதத்தினைப் புகழும் ஆண்டாளைப் பார்க்கிறோம். மாயனை, மன்னு வடமதுரை மைந்தனை, மாமத யானையுதைத்த தீரனாக ஐந்தாம்பாடல் குறிப்பிடுகின்றது. கஞ்சன் வஞ்சனையை வென்ற மதுரைக் கிறைவனின் திறம் அடுத்த பாட்டில் உரைக்கப்படுகிறது. சிசுபாலனைப் பற்றிய குறிப்பு ஏழாவது பாட்டிலும், கன்றுகளை மேய்த்த கோபாலனைப் பற்றிய குறிப்பு எட்டாவது பாட்டிலும் இடம் பெற்றுள்ளன. குள்ள வாமன உருவம் எடுத்துச் சென்று, மாவலிசக்கரவர்த்தியிடம் மூன்றடி மண்கேட்டு இரந்து அண்டத்தையும் நிலத்தையும்ஓரடியாலும் ஆகாயத்தை இரண்டாவது அடியாலும் அளந்து மூன்றாவது அடிக்கு இடமில்லையாகவே மாவலிச் சக்கரவர்த்தியின் தலையில் மூன்றாவது அடியை வைத்து அவனை மண்ணுக்குள் அழுத்திய வரலாறு ஒன்பதாவது பாட்டில் பின்வருமாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்,
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே!38

ஆதிமூலமே என்று கதறி ஓலமிட்டழைத்த கசேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றிய செய்தி ஈற்றயற்பாடலில் இடம் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/142&oldid=1462636" இருந்து மீள்விக்கப்பட்டது