பக்கம்:ஆண்டாள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

13


 சமயம் என்பது இறைவன் தொடர்புடையது என்று கூறலாம். கடவுளை வழிபடுகின்ற நெறியே சமயம் என்றும் நவிலலாம் சமய அடிப்படை மனித வாழ்வோடு பொருந்தியது எனலாம். தமிழ் மொழியின் தோற்றம் முதல் அதன் இலக்கியம் மேருமலைபோல் வளர்ச்சியடைந்தது வரை அதன் வரலாற்றை நோக்கினால் யாவும் சமயச் சார்பாகவே இருப்பதை அறியலாம். மொழியிலுள்ள இலக்கிய வளர்ச்சி சமயத் தொடர்பாகவே உள்ளது. சங்ககாலம் முதல் இன்று வரை தோன்றியுள்ள இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால் இவ்வுண்மை விளங்கும். சங்க காலத்தில் சமயத் தொடர்பு கொண்ட இலக்கியங்கள் அதிகம் தோன்றாது போயினும் அதற்குப் பிறகு தோன்றித் தமிழ்மொழியை வளப்படுத்திய இலக்கியங்கள் பெரும்பாலும் சமயச் சார்பாகவே உள்ளன என்பது ஒரு கருத்தாகும்? (டாக்டர் ந. சுப்புரெட்டியார், அறிவுக்கு விருந்து, ப. 108) சங்ககாலத்தில் சமயம் ஒரு தனித்தலையாகக் கருதப் பெறவில்லை. அப்போது சமயம் உணர்வு நிலையில்தான் இருந்தது.

சங்ககாலத்து இறைவழிபாடு

   ஆலமுங் கடம்பும் கல்யாற்று நடுவும் 
   நால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் 
   அவ்வவை மேய வேறு வேறு பெயரோய் 
   எவ்வயி னோயு நீயே!”
                            - பரிபாடல், 4:67-70
ஈண்டு, "ஆலும் கடம்பும் யாற்றிடைக் குறையும் குன்றும் பிறவுமாகிய அவ்விடங்களைப் பொருந்திய பல தெய்வங்களாக வகுத்துச் சொல்லப்படும் பெயரையுடையோய்!” என்றமையின் சங்ககாலத்துத் தமிழ் மக்கள் கடவுள் ஒருவனேயென்னும் உண்மையை நன்குணர்ந்தனர் என்பது வெளிப்படை
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/15&oldid=1151142" இலிருந்து மீள்விக்கப்பட்டது