பக்கம்:ஆண்டாள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ஆண்டாள்


வளர்ந்து உச்ச நிலையை அடைவது நன்கு புலனாகும்" என்பர் பண்டிதை எஸ். கிருஷ்ணவேணி அம்மையார்129. மேலும் இவர் 'நாச்சியார் திருமொழி' என்னும் பாடற்பகுதி குறித்த தம் கருத்தைப் பின்வருமாறு மொழிவர்.

"நாச்சியார் திருமொழி" ஓர் அழகிய ஓவியம். இஃது யாருடைய ஒவியம்? அழகே திரண்டதெனக் காணும் கண்ணன் ஒவியம். இதைத் தீட்டியவர் யார்? இவ்வுலகையே ஒரு படமாக:வரைந்து காட்டும் ஒவியத் திறமை வாய்ந்த நம் கோதையார். ஒவியந் தீட்ட என்னென்ன வேண்டும்? எழுதப்படுவோர் உருவப் படமும் பல நிறங்களும் தீட்டும் கருவியும் வேண்டும். இவற்றுள் ஒன்று குறையினும் ஒவியம் உருப்பெற்றெழாது என்பது திண்ணம். ஒவியத்தில் அமைய வேண்டிய நம் கண்ணன் திருவுருவம், நம் ஆண்டாள் அகத்திலும் கண்ணிலும் பொருந்திக் காட்சி அளிக்கிறது. மலர்கள், மலைகள், பறவைகள், சங்கு, ஆர்வம் முதலியன பல நிறங்களாய் அமைகின்றன. இவர் ஞானமே சித்திரக் கோலாகிறது. இந்நிலையில் நம் நுட்ப மதியார் தம் ஞானக் கோலை இயற்கையாகிற நிறங்களில் தோய்த்துத் தோய்த்துப் பெட்பு வாய்ந்த ஒரு கண்ணன் அழகு ஒவியத்தை வரிவடிவில் இறக்கியுள்ளார். இது யாவர்மனத்தையும் கவர்கிறது."130

ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே வடபத்திரசாயி -வடபெருங்கோயிலுடையான் ஆர்வத்துடன் அணிந்து இன்புறக் காரணமாக இருந்தமையின் பெரியோர் இவரைச் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என வழங்கினர். 'திருப்பாவை’ என்னும் பிரபந்தத்தைப் பாடியருளிய பாவையாதலின் இவரைச் 'செல்வியார்' என்று செப்பலுற்றனர். அங்ஙனமே பூமாலையைப் புனைந்து தந்ததனால் இவர் "நாச்சியார்" என்றும் நவிலப் பெற்றார். 'நாச்சியார்' என்ற சொல் 'தலைவியார்' என்னும் பொருண்மை சுட்டுவதாகும். உலக உயிர்களுக்கும் உயிர்களின் உள்ளுறையும் இறைவனுக்கும் இவரே தலைவியார் எனக்கொள்ளலாம். அருளே வடிவாக உருவெடுத்திருக்கும் ஆண்டாள் அம்மையார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/186&oldid=1462187" இலிருந்து மீள்விக்கப்பட்டது