பக்கம்:ஆண்டாள்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். சி. பா.
183
 


மக்களிடம் பரிவு கொண்டு இறைவனுக்கு நல்லுபதேசம் (புருஷகாரம்) செய்வதனைக் காணலாம் ஆண்டாள் தம் பெண்மைக் குணல்களிற் பெருமை பீறிட நிற்கும் அன்பு என்னும் அருங்குணத்தால் உலகத்தைத் தம் வயப்படுத்தி உயிர்களைத் திருத்தி அமைக்கிறார் என்பதாகும் பெண்மைக் குணங்களுள் அரும்பேறாம் அருளுடைமை காரணமாக உலக உயிர்களை இறைவனிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார் என்றும் கொள்ளலாம்.

சேதனனை அருளாலே திருத்தும்
ஈஸ்வரனை அழகாலே திருத்தும்131

என்னும் ஸ்ரீவசன பூஷன வாக்கியங்களின்படி தன்னிடம் நிறைந்தொளிரும் ஆன்ம அழகால் திருவரங்கப் பெருமானைத் தம்பால் இழுக்கிறார். இவர் திருவாய் மலர்ந்தருளியநூற் பெயரும் இவர் பெயரையொட்டியே நாச்சியார் திருமொழி என அமைந்தது பெரிய விசேடமன்றோ!

இனி ஆண்டாள் என்னும் சொல்லை நோக்குவோம். உலக உயிர்களையும் ஆளும் திறமை பெற்றிருந்தவர் ஆனதனால் ஆண்டான் எனப் பெற்றார். "நீர் எனக்கு மாமனார் ஆனிர்" என்று திருவரங்கத்துப் பெரிய பெருமாளே மனம் உகந்து புதுவையர்கோனாம் பெரியாழ்வாரிடம் கூறுகின்ற அளவிற்குக் கோதை' என்னும் பிள்ளைத் திருப்பெயர்கொண்டு, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக வளர்ந்து, திருப்பாவை பாடியருளிய செல்வியராகத் திகழ்ந்து; நாச்சியார் திருமொழி நவின்ற நாச்சியாராய் நிறைவுபெற்று, வைணவ உலகில் என்றும் 'ஆண்டாள்' என்னும் திருப்பெயரால் அழைக்கப்பெறுபவராய் விளங்குகின்றார் என்பது ஒருதலை.

இதனால்தான் தொடக்கத்தில் பெரியாழ்வார்,

பேசவும் தெரியாத பெண்மையின்
பேதையேன் பேதையிவள்132

என்றும்,

ஆ. —12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/187&oldid=1158328" இருந்து மீள்விக்கப்பட்டது