பக்கம்:ஆண்டாள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22
ஆண்டாள்
 


தண்ணிய தழையை உடுத்திக் கொள்ளக் குருத்தமரம் வளைந்திட மிதித்துத் தந்த கண்ணன்போல என்று உவமை சொல்லும் முகத்தான்,

வண்புனல் தொழுநை வார்மணல் அகன்றுறை
அண்ட மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல
- அகநானூறு 59: 4-6


என்று மதுரை மருதனிள நாகனார் கூறுகின்றார்."25 இதே போன்று பின்னும் சிலவிடங்கள் இந்நூலுள் காணக்கிடக்கின்றன."26 (அகநானூறு: 175; 15-16; அகநானூறு 360)

இனி, கற்றறிந்தாரேத்தும் கலித்தொகை தேன் செறிந்த மொழிகளானும் தெள்ளிய உருவகங்களாலுமியன்று கற்றோர் கருத்தைக் கவர்கின்றது. இந்நூலில் கண்ணனது பிள்ளைமை வரலாற்றுச் செயல்கள் கூறப்படுகின்றன."27 (முல்லைக்கலி; 18-20; நெய்தற்கலி; 214:1, 184: 1-3).

மேவார்ர விடுத்தந்த கூந்தற் குதிரையை
வாய்ப் பகுத்திட்டுப் புடைத்த ஞான்றின் னன்கொள்
மாயோ னென்று:28

-முல்லைக்கலி; 103:5-53


என்னும் ஒரு சான்றினைக் காட்டி, விரிவஞ்சி விடுத்துச் செல்லுகின்றேன்.

இவ்வாறே 'ஒங்கு பரிபாடல்' என்று ஆன்றோர் குறிக்கின்ற நூல், பேரின்பமும் சிற்றின்பமும் ஆக இருவகைப் பகுதிகளையும் கூறிச் சிறப்புறுகின்றது. அதில் 'திருமாற்கு இருநான்கு' என்று கூறப்படுகின்றது; இப்பொழுது ஏழு பாடல்கள் அச்சில் வந்துள்ளன. எட்டுத்தொகை நூல்களுள் விரிவாக உய்த்துணரும் வண்ணம் இந்நூலில் தான் மாலவன் குன்றங்களும், செயல்களும் விளக்கம் பெறுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/24&oldid=955019" இருந்து மீள்விக்கப்பட்டது