பக்கம்:ஆண்டாள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

33


என்றெல்லாம் எடுத்தியம்பும் பேறுபெற்ற தலம் அது. சுருங்கக் கூறின்,

கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மண்மாடந் தோன்றுமூர்-நீதியால்
நல்லபத்தர் வாழுமூர் நான்மறைக ளோதுமூர்
வில்லிபுத்துர் வேதக்கோ னுார்

என்று சொல்லிவிடலாம். அத்தகைய வில்லிபுத்துார் நகரத்தை விளங்கவைத்தவர் ஆண்டாள்.

விட்டுணுசித்தர் என்னும் பெரியாழ்வார் அந்த ஊரில் பெருமானுக்குத் திருத்துழாய்ப் பணி இயற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவர் ஒருநாள் மலர்வனத்தில் மண்ணைக் கிளறும்பொருட்டுப் பணிசெய்து கொண்டிருந்த போது, அந்த மலர்வனத்தில் ஒருபுறம் பச்சைப் பசேலென்று செழித்து அடர்ந்து வளர்ந்திருந்த திருத்துழாய் அடியில் மிக்க ஒளியுடன் கூடிய ஒரு பெண்மகவு இருத்தலைக் கண்டார். பெரியாழ்வார் அம் மகவினை மகிழ்ந்தெடுத்து அதனைத் தம் மகளாகவே கருதிக் "கோதை" என்று பெயரிட்டு வளர்த்து வருவாராயினார்.

'ஆடிப்பூரம் மேன்மேலும் மிக விளங்க விட்டுசித்தன் துாய திருமகளாய் வந்து'46 (தேசிகமாலை, பிரபந்தசாரம், 10). 'திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள்'45 (ஶீ ஆண்டாள் சந்திரகலா மாலை-2) 'அர்ச்சாவதாரத்தை ஆதரித்து ஏத்து திரு வாடித் திருப்பூர நாள்...... புதுவையில்...... வந்து அவதரித்து'48 (ஷெ) போன்ற கூற்றுகள் ஆண்டாள் ஆடித் திங்கள் பூர நட்சத்திரம் கூடிய செவ்வாய்க்கிழமையில் தோற்றம் கொண்டார் என்று விளங்க வைக்கின்றன.

குருபரம்பரைகளில் ஆண்டாள் தோன்றிய திங்களும், நட்சத்திரமும் காணப்படுகின்றனவே அன்றி, ஆண்டு காணப் பட்டிலது எனவே ஆராய்ச்சியாளர்களுக்கிடையே இவரது காலம் பற்றிக் கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/35&oldid=957503" இலிருந்து மீள்விக்கப்பட்டது