பக்கம்:ஆண்டாள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

47

சீரார்வளை ஒலிப்ப, அன்ன மென்னடை கொண்டு அணி அரங்கத்தான் திருமுன்பே சென்று கண்களாரக் கண்டு களித்து, கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் என்னும் பேர் பெற்று உள்ளே புகுந்து, நாகபர்யங்கத்தை மிதித்தேறி, திருவரங்கச் செல்வனைச் சேர்ந்து, அவன் திருவடிகளிலே அந்தர்ப்பவித்தருளினார்."

இது மணியும் முத்தும் சேர்த்துக் கோத்தாற்பெறும் பொலிவோடு மணிப்பிரவாள நடையில் தமிழும் வடமொழியும் கலந்து எழுதப் பெற்றிருப்பினும், இதில் காணப்படும் கற்பனைவளனும், உணர்ச்சியும் மிகுந்த சொல்லோவியம் ஆண்டாள் அரங்கனோடு கலந்த கலப்பினைக் கண்முன் வைத்துக் காட்சிப் படமாகக் காணக் காட்டுகின்றது.

பெற்ற பாசத்தினும் பேணி வளர்த்த பாசம் கொடிதன்றோ? மகளாரின் பிரிவினால் பெரியாழ்வார் மனமாழ்கினார்.

ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்;
பெருமக ளாய்க்குடி வழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண் டுகந்து
மணாட்டுப் புறஞ்செய்யுங் கொல்லோ!

-பெரியாழ்வார் திருமொழி.

என்னும் மொழியின்வழி அவருடைய பிரிவுத்துயரத்தை உணரவைக்கின்றார். அவருடைய இந்தப் பிரிவொலி பெண் பிள்ளை பெற்றெடுத்துப் புகும்வீடு அனுப்பி வைக்கும் பெற்றவர்களின் சார்பொலியாகவே ஒலித்துக் கொண்டிருக்கும் எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/49&oldid=958450" இலிருந்து மீள்விக்கப்பட்டது