பக்கம்:ஆண்டாள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கிடைத்தமையினைப் பெரும்பேறாகக் கருதுகின்றேன்.

முதலாவதாகத் தம் அருமைத் தந்தையார் அண்ணாமலை அரசர் அவர்கள் நிறுவிய இருபெரும் பொது நிறுவ'னங்களான அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினையும், சென்னைத் தமிழ் இசைச் சங்கத்தினையும் தம் இரு கண்களென எண்ணிக் கண்ணின் மணியெனக் காத்து, எளியேன் போன்ற எண்ணற்றோருக்கு ஊக்கமும் ஆக்கமும் நல்கி, தோற்றமும் ஏற்றமும் தந்து புரந்துவந்த முத்தையவேள் அவர்களை நன்றியோடு நினைவு கூர்கின்றேன்.

நான் இப்புலவர் திருநாளில் பேச மேற்கொண்ட புலவர் 'ஆண்டாள்' ஆவர். ஆண்டாளை நான் தேர்ந்தெடுத்ததற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை யான் ஈண்டுக் குறிப்பிடுதல் இன்றியமையாததாகும், யான் பிறப்பால் சைவன்: வாழும் நெறியால் சமரச நெறியினைச் சார்ந்து நிற்பவன். நான் ஏறத்தாழ இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் முதுகலை பயிலும் மாணவர்களுக்கு நான் படித்த 'உச்சிமேற் புலவர்கொள் பச்சையப்பன் கல்லூரி'யிலேயே ஆசிரியனாய் அமர்ந்து பாடஞ் சொல்லிக் கொடுத்த காலையில், ஒரு ஞான்று மணிவாசகப் பெருமான் என் சொந்த ஊராம் திருவண்ணாமலையில் மார்கழித் திங்களில் அருளித் செய்த திருவெம்பாவையினையும், ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவையினையும் பாடஞ் சொல்லும் வாய்ப்புக் கிட்டியது.

அதுபோது திருவெம்பாவையின் தத்துவக் கோட்பாடுகளில் திளைத்த நான், ஆண்டாளின அழகு தமிழில் என் நெஞ்சத்தைப் பறிகொடுத்துவிட்டேன். 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலினை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய எனக்கு ஆண்டாள் கவிதைகளே உயர்ந்த செழுமை வாய்ந்த கவிதைகள் (Richest poetry) என்னும் உண்மை புலப்பட்டது. இவ்வுண்மையினைச் செல்லுமிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/7&oldid=957086" இலிருந்து மீள்விக்கப்பட்டது