பக்கம்:ஆண்டாள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

69

இச்செய்தியினையும், ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளையவர்களின் வியாக்கியான உரையையும் கண்ட காலையில், நாடு நல்வளம் குன்றியபோது நல்ல மழை பெய்யவும், கன்னியர் தம் வாழ்க்கைத் துணையாக உத்தம நாயகர்களைப் பெற்று இம்மைப் பயன் பெறவும் வேண்டிக் காத்தியாயனி தேவியைக் குறித்து மார்கழித் திங்கள் முழுதும் நோன்பு நோற்பதும், அக்காரணத்தின் பொருட்டு அக்கன்னியர் அனைவரும் வைகறைப்போதில் எழுந்திருந்து, ஒருவரையொருவர் துயிலுணர்த்திச் சென்று, ஆற்றங்கரையினையடைந்து நீராடித் தேவியின் படிவம் ஒன்றனை அமைத்துத் தத்தம் எண்ணம் ஈடேறப் பூசனை புரிவதும் பண்டைய மரபென்பது விளக்கமுறுகின்றது. மேலும், திருப்பாவைப் பாசுரங்களின் இறுதியில் வரும் "எம் பாவாய்” என்ற தொடர் பாகவதத்திற் கண்டவாறு, ஈர நுண்மணலாற் சமைக்கப் பெற்ற தேவியின் உருவத்தைக் குறிப்பதாகக் கொள்ளுவதால் வரும் இழுக்கொன்றுமில்லை. 'பாவை' என்னுஞ்சொல் 'பெண் தெய்வத்தின் பிரதிமையைக் குறிப்பதாகும்' எனக் கொள்வர் ஆன்றோர். திருப்பாவையிலும்,

"நம் பார்வைக்குச் செய்யுங் கிரிசைகள்"
- திருப்பாவை : 2
நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்,
- திருப்பாவை : 3
"பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம் புக்கார்"
- திருப்பாவை : 13

என வரூஉந் தொடர்கள் கொண்டு ஒரு பிரதிமை படிவம் ஒன்று வைத்து வணங்குங் குறிப்புத் தோன்றுதல் வெளிப்படை. ஆனால் 'பாவை' எனத் திருப்பாவைச் சொல் வருமிடங்களிலெல்லாம் 'நோன்பு' என்ற வியாக்கியான கர்த்தர்கள் பொருள் கொண்டுள்ளார்கள். திருப்பாவையன்றிப் பிறவிடங்களிற் 'பாவை' என்ற சொல், நோன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/71&oldid=991804" இலிருந்து மீள்விக்கப்பட்டது