பக்கம்:ஆண்டாள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர்.சி.பா.

73

இதனால் 'தைந்நீராடல்' என்ற வழக்குண்மை விளங்கும். மேலும் ஐங்குறுநூற்றுள் மருதத்திணைக்கண் வந்துள்ள பாடலொன்று வருமாறு:

செவியிற் கேட்பினுஞ் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணி னென்னா குவள் கொல்
நறுவீ யைம்பான் மகளி ராடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந் துண்ணுநின் பரத்தை மார்பே

- ஐங்குறுநூறு: 84

இப்பாட்டின் கீழ்க்காணலாகும் பழைய வுரையில், "பண்டைக் காலத்தில் தைத் திங்களின் நாட்காலையில் மகளிர் நோன்பு கருதி நீராடி வந்தனர்" என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளது.

அடுத்து, கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையில் இரு பாடல்களில் தை நீராடல் பற்றிய குறிப்பினைக் காணலாம்.

மருவியான் மருளுற இவனுற்ற தெவனென்னும்
அருளிலை இவட்கென அயலார்நிற் பழிக்குங்கால்
வையெயிற் றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ
தையில்நீ ராடிய தவந்தலைப் படுவாயோ

- குறிஞ்சிக்கலி 23; 10-23

இப்பகுதிக்கு 'உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர்' உரை வருமாறு:

யான் மயக்கமுறுகையினாலே அதுகண்டு தானும் மருண்டு இவனுற்ற நோய் யாதுதானென்று கேட்கும் அருள் இவட்கு இல்லையென்று யான் கூற, அது கேட்டு அயலார் நின்னைப் பழிக்குமளவிற் கூரிய எயிற்றினையுடைய இளைய மகளிர்க்கு நடுவே வகுப்புடைய கோலத்தாலே பொலிவு பெற்று நீ தைத் திங்களில் நீராடிய நோன்பின் பயனைப் பெறுவையோ? பெற்றாய்காண்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/75&oldid=991815" இலிருந்து மீள்விக்கப்பட்டது