பக்கம்:ஆண்டாள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

77


வழங்கலாயிற்று என்று கொள்வது ஏற்புடையதாமோ என்பது அறிஞர் ஆராய்தற்குரியது. அதனால் முன் குறித்த பாகவத வரலாற்றுக்கியைய, அம்பாவாடல் என்பதற்குத் தேவியின் பொருட்டு நிகழ்த்தப்படும் நீராட்டு' என்று பொருள் காணுதலே மிகவும் பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. அம்பா என்பது தேவியைக் குறித்தல் வெளிப்படை. மார்கழி நோன்பைத் திருவாதிரைக்குரிய இறைவனது விழாவாகப் பரிமேலழகர் கருதினரேனும், அச்செய்தியொன்றும் மூலத்தாற் புலப்படாமையும் காண்க" (ஆராய்ச்சித் தொகுதி, பக். 194–195)

"பரிபாடல் கூறுமாறு, மார்கழிப் பெளர்ணமியிற் றொடங்குவதாகிய நீராட்டத்தைத் தைந்நீராடலென இங்ஙனம் முன்னோர் கூறியதன் காரணம் என்னெனிற் கூறுவேன். பெளர்ணமியும் திருவாதிரையும் மார்கழிமாதம் 15ஆம் தேதியிலேனும் அதன் பின்பேனும் ஒன்றுசேர்வது இயல்பு. அமாவாசையோடும் பெளர்ணமியோடும் மாதங்கள் முடிவுபெறுதலால் முறையே அமாந்தம், பூர்ணிமாந்தம் என்னும் பெயர்கொண்ட இருவகை மாதமுறைகள் வழங்கி வருவனவற்றுள். பூர்ணிமாந்தம் என்ற முறைப்படி, மார்கழியிடையிற் பெளர்ணமிக்குப் பின்வரும் மாதம்-மார்கழியின் பிற்பகுதியும் தையின் முற்பகுதியுமாமென்றும், அதனால் மார்கழி நீராட்டம் தைந்நீராட்டம் என்று இருவகையாகவும் அந்நீராடலைக் கூறுவது கூடுமென்றும் கூறுவர். அதனால் மார்கழியில் நிகழ்த்தப்படுவதாகத் தெளிவாய் அறியப் பட்டதைத் தைந்நீராடல் என்று பரிபாடல் முதலியவை, வழங்குவதற்கு இதுவே காரணம் என்க. எனவே, மார்கழி நோன்பு முற்காலத்தே பூர்ணிமாந்த முறைப்படி அனுஷ்டிக்கப் பட்டதாதல் வேண்டுமென்பதும், ஆயினும், ஸெளரமானப்படி தைம்மாதமும் அதனுடன் கலந்து வருதலால் "தைந்நீராடல்' என்று அதற்குப் பெயர் வழங்கியிருத்தல் வேண்டுமென்பதும் பெறப்படுகின்றன".

ஆராய்ச்சித்தொகுதி, பக். 195, 196.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/79&oldid=1155679" இலிருந்து மீள்விக்கப்பட்டது