பக்கம்:ஆண்டாள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மெல்லாம் சொல்லி வந்தேன். திருப்பாவை, நாச்சியார் திருமொழிப் பாடல்களின் அழகும் மாட்சியும் என்னைப் பலகாலும் அகங்குளிரச் செய்துள்ளன; அப்பாடல்கள் என்னை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன. 'இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்' என்று நினைக்க வைத்துள்ளன.

மேலும் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படைகளாக யான் மூன்றனைக் கருதுவதுண்டு. ஒன்று இறை பரவல்; இரண்டு இயற்கையில் ஈடுபடல்; மூன்று பெண்மை போற்றல் என்பதாகும், இறைவனை வணங்கி இயற்கைக் காட்சிகளில் தோய்ந்து பெண் மையைப் பாராட்டி நிற்பது என்கடன் எனக் கொண்டு ஒல்லும் வகையான் யான் வாழ்ந்து வருகின்றேன். அம்முறையில் ஒளவையார், வெள்ளி வீதியார், காக்கைப் பாடினியார், அள்ளுர் நன் முல்லையார், பாரி மகளிர் முதலான புலமைச் செல்வியர்களுக்குப் பின் இடைக்காலத்தில் வாழ்ந்த வர்களுள் நாயன்மார்களுள் "பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சிந்தித்தேன்" என்னும் புனிதவதியாராம் காரைக்காலம்மையாரும், ஆழ்வார்களுள் "மானிடவர்க்கென்று பேச்சுப்ப்டில் வாழ்கில்லேன்" என்று வைராக்கிய உள்ளத்துடன் வாழ்ந்து காட்டிய ஆண்டாளும் நம் கண்முன் நிற்பர்.

எனவே ஆழ்வார்களில் ஒருவரும், பெரியாழ்வாரின் பெண் கொடியாகத் திகழ்பவரும், வேயர் குலத்து விளக்காக ஒளிர்பவரும். குடிக்கொடுத்த சுடர்க் கொடியாகத் துலங்குபவரும். பாவை பாடிய பாவையாகப் பளிச்சிடுபவரும். கோதில் தமிழ் உரைத்த கோதையாகக் கொண்டாடப் பெறுபவருமாகிய "ஆண்டாள்" குறித்துப் பேசிய பேச்சு இன்று நறுமலர்ப் பதிப்பக வெளியீடாக வெளிவருகின்றது.

-சி, பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/8&oldid=957095" இலிருந்து மீள்விக்கப்பட்டது