பக்கம்:ஆண்டாள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா. 81


தம் பாட்டிற் கிளத்திக் கூறுவார் போன்று மணிவாசகப் பெருந்தகையாரும்,

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையற் குடைந்து குடைந்துன் கழல்பாடி

-திருவெம்பாவை : 11

என்றும்,

பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
 சங்கஞ் சிலம்பு சிலம்பு கலந்தார்ப்பக்
 கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
 பங்கயப் பூம்புன லாடேலோர் எம்பாவாய்

-திருவெம்பாவை : 18

என்றும் கூறியிருக்கக் காணலாம். மேலும், இவ்விழாவின் இறுதியில் மலையகத்து மகளிர் தம்மை ஆடை அணிகலன்களால் நன்கு ஒப்பனை செய்து கொண்டு. உற்றாரும் உறவினருமாக எல்லோரும் கூடியிருந்து விருந்துண்பதும். அவ்விருந்தில் பாயசம் விசேட உணவாகக் கொள்னப்படுவதும் இன்றும் காணக்கிடைக்கும் காட்சிகளாகும். இக்காட்சி யினையே விண்டுரைப்பார் போலத் திருப்பாவைச் செல்வி யாரும்,

கூடாரை வெல்லும்,சீர்க் கோவிந்த! உன்தன்னைப்
 பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
 சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பலகலனும் யாம்அணிவோம்
 ஆடை உடுப்போம் அதன்பின்னே பால்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
 கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

-திருப்பாவை : 27

என்று குறிப்பிட்டிருப்பது கொண்டு அறியலாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/83&oldid=1155923" இலிருந்து மீள்விக்கப்பட்டது