பக்கம்:ஆண்டாள்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். சி. பா.

89


அழைப்புடன் பாடல் தொடங்குகின்றது திருப்பாவை பாடிய பாவை யாரை அழைக்கிறார் என்பது அடுத்துப் புலனாகி விடுகின்றது.

நேரிழையீர், சீர்மல்கும் ஆய்ப்
பாடிச் செல்வச் சிறுமீர்காள்

எவரை நாம் பணிகொள்ள வேண்டுமோ அவர்களை முன்னிலைப்படுத்தி, முகமன் கூறி, குளிர்ந்த சொற்களாற் குளிர்வித்து அழைத்தால்தான் அவர்கள் ஏற்று வருவர். இத்தகு விரகு ஆண்டாளின் உளவியற்பாங்கு உணர்ந்த திறத் தினைப் புலப்படுத்தா நிற்கும். திருப்பாவையின் பலவிடங்களில் இவவிரகினை (technique) அவர் கையாள்வதனைப் பின்னரும் காணலாம். பிறிதொரு பாடலில்.

சில்லென்று அழையேன்மின்

என்றொரு பெண் எதிர் பேசுவதாக வருவதனையும் நோக்குக.

அழகிய அணிகலன்களை அணிந்து அழகு துலங்குபவர்களாகப் பெருமை துலங்கும் ஆயர்பாடியின் அணியிழையார் - செல்வச் சிறப்புடன் விளங்கும் சிறுமியர்-காட்சி தருகின்றனர். இவர் ஏன் ஆயர் மகளிரை அழைக்கின்றார் என்பதனை முதற்கண் காணவேண்டும்.

மாயோன் மேய காடுறை யுலகமும்

- தொல்; அகத்திணையியல் : 5

என்பர் தொல்காப்பியனார். காடும் காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம் எனப்படும். இது குறிஞ்சியாகிய வன்னிலத்திற்கும் மருதமாகிய மென்னிலத்திற்கும் இடைப்பட்ட நிலமான காரணத்தால் இடைநிலம் என்றும் வழங்கும். இவ்இடை நிலத்தில் வாழ்ந்தவர் இடையர் எனப்பட்டனர். இவர்கள் தொழில் பசுநிரை மேய்த்தலாகும். பாலும் ஆ. —6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/91&oldid=1462085" இருந்து மீள்விக்கப்பட்டது