பக்கம்:ஆண்டாள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

ஆண்டாள்


என்று நாராயணனைப் பாடிப் பரவசமடைந்த நிலையினை இளங்கோவடிகளும் இனிமை ததும்ப எடுத்தோதுகின்றார்.

சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே

- ௸ : 1

கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தங் கண்ணென்ன கண்ணே

- ௸ : 2

என்றும் அவர் மேலும் கூறுதல் காண்க.

மேலும் கண்ணன் அவதாரம் செய்தது ஆயர்பாடியிலே அன்றோ'. கண்ணன் 'ஆயர் தம் கொழுந்தல்லவா? எனவே அவன் மகிழ்ந்திருப்பதால் அவனைச் சுற்றிலும் இசை எழும்புகின்றது; ஆடல் நிகழ்கின்றது. எங்கும் செல்வவளம்; எங்கும் இன்ப வெள்ளம். இதனையே பெரியாழ்வாரும் -

ஓடுவார் விழுவா ருகந்தா லிப்பார்
நாடு வார்நம்பி ரானெங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றாய்ப பாடியே.

- பெரியாழ்வார் திருமொழி; 1:2:2

ஆயர்பாடியிலுள்ள கன்னியர் கண்ணனோடு களித்திருந்த செயல் முதியோர் சிலருக்குச் சீற்றத்தை வரவழைத்தது. 'இச்செயலால் குலம் பழிபூணும்' என்று அவர்கள் கொண்டனர். எனவே இரு திறத்தாரையும் பிரித்து வைத்தனர். கன்னியரி நிலவறையில் அடைபட்டனர்; கண்ணன் யசோதையின் கட்டுப்பாட்டில் அகப்பட்டான். கண்ணனைக் காணாத கன்னியர் கலங்கினர்; கையற்று நெஞ்சழிந்தனர். அம்மகளிர் வயிறெரிந்தால் அந்நாட்டில் மாரிவளம் குன்றாதா? 'குலப்பெண் வயிறெரிந்தால் கொடிச்சீலையும் பற்றியெரியும்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/94&oldid=1462090" இலிருந்து மீள்விக்கப்பட்டது