உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

ஆண்டாள்


கொண்ட உறுதியே கண்ணனையடைய வேண்டும் என்ற ஆசைப் பெருக்கே போதுமானதாகும். இதனையே பெரியோர் சேதனரை உய்விக்கும் சிறந்த கருவி என்றனர். அதாவது உலகோரைக் கடைத்தேற்றும் உயர்ந்த கருவியாகும். வைணவக் கோட்பாட்டின் உயிர்நிலை என்று வழங்கப் படுவதும் இதுவேயாகும். சிறுமியர் விளையாட்டின் மூலமாகவே இறையருளைப் பெறுவான் வேண்டி இந்நூல் இயற்றப்பட்டதோ என்று எண்ணுவதற்கும் இடந்தருவதாய் இந்நூல் (திருப்பாவை) அமைந்துள்ளது.

எனவேதான் ஆண்டாள் தாம் பாடிய திருப்பாவையில் ஆயர் மகளிரைத் தம் தோழியாகக் கொண்டார் என்பது இதுகாறும் காட்டிய ஏதுக்களான் தெளிவுறும்.

அடுத்து, கண்ணனைப் பற்றிய வீரமும் எழிலும் விளங்கவுரைக்கப்படுகின்றன.

1. கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,

2. ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

3. கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணன்.

வீரம் உள்ள இடத்தில்தான் காதல் விளையும். கலித் தொகையில் கொல்லுகின்ற தன்மையுடைய எருதுகளை எவனொருவன் கொம்புகளைப் பிடித்து அடக்கவில்லையோ அவனை இந்தப் பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியின் காலையிலும் ஆயர்மகள் அணைத்துக் கொள்ள மாட்டாள் என்ற கருத்துப் புலப்பட,

கொல்லேறறுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்

-கலித்தொகை, முல்லைக்கலி 3 : 63-64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/96&oldid=1462092" இலிருந்து மீள்விக்கப்பட்டது