உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்டாள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

ஆண்டாள்


மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்யும் திறலுடையவன் கண்ணனாம் நாராயணனே என்று கூறுவதற்காகவே 'கார் மேனிச்செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்' என்று முரண் தொடை அமைந்த இத்தொடரினை ஆண்டாள் ஆண்டுள்ளார் என்று கொண்டால் அவர்தம் கவிப்புலமையும், சமய நோக்கும், சமத்காரப் போக்கும் தெற்றெனப் புலனாகும்.

"நாராயணனே நமக்கே பறை தருவான்"

பாவை நோன்பினை முறையாக மேற்கொண்டிருக்கும் நமக்கு நாராயணனே அனுக்கிரகம், அதாவது அருள் செய்வான். அவனே நமக்கு அருள்பாலிக்கும் தகுதி வாய்ந்தவன்.

"பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்”

பாவை போன்ற பெண்களே! உலகோர் நம்மைப் புகழ்கின்ற அளவில் நாம் பாவை நோன்பை நோற்க (அனுஷ்டிக்க) வேண்டும்.

இவ்வாறு கூறித் தோழியரை எல்லாம் திருப்பாவைச் செல்வியார் மார்கழி நீராட்டத்திற்கு அழைத்துப் பாவை நோன்பு நோற்கச் சொல்கிறார்.

இப்பாசுரத்தில் ஒர் உள்ளுறைப் பொருளும் உண்டு என்பர். இப்பாடலை வேதாந்தமாக விரித்துரைக்கவும் இடமுண்டு. 'நீராடல்' என்ற சொல் 'கல்வி' என்னும் பொருண்மைத்தாகும் அகப்பொருளில் 'சுனையாடல்' என்றும் வரும். எனவே இப் பாசுரம், கண்ண பரமாத்மாவுடன் பரம பாகவதர்கள் விரும்பும் பேரின்பக் கலவியைக் குறிக்கின்றது, என்பர். அப்பேரின்பப் பொருள் கிட்டுவதற்கு ஒரு சாதனம் பாவைநோன்பாகும். அப்பாவை நோன்பினை நோற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்டாள்.pdf/98&oldid=1462094" இலிருந்து மீள்விக்கப்பட்டது