பக்கம்:ஆண் சிங்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


போலும். பெரியவனும் மறுப்பு எதுவும் கூறாது, தன் இதய வேதனையை நெடிய சோக மூச்சாக மாற்றியபடி அகன்று விடுவான். கடன் வாங்கியாவது தம்பியின் ஆசையைப் பூர்த்தி செய்து வைப்பான். தனது தேவையைக் குறைத்துக்கொண்டாவது தம்பியின் விருப்பங்களை நிறைவேற்றுவது என்ற கொள்கையைப் பெரியவன் மேற்கொண்டான்.

“என்ன இருந்தாலும் பங்காளி அப்பா! நீ உனது நலனையும் கருத்தில் வைத்துக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று இலவச ஆலோசனை வழங்க முன் வந்தார்கள் சில சகுனி மாமாக்கள். ‘எது நல்லது என்று எனக்குத் தெரியும். எனக்கு உங்கள் போதனைகள் தேவையில்லை’ என்று அவன் பணிவுடன் அறிவித்து விடுவான்.

ராமலிங்கத்திற்குப் பத்தொன்பது வயதானதும், பெரியவர்கள் அவனது நன்மையை மனசில் கொண்டு, நல்வாழ்வுக்கு வழிகாட்ட நிச்சயித்தார்கள். தனித் தனியாகவும் பலராகவும் அவனிடம் பேச்சுக் கொடுத் தார்கள். உனக்கும் வயசாகிக் கொண்டே போகுது. ஒரு கலியானத்தைச் செய்துகொள். அதுக்கு நாங்கள் ஏற்பாடு பண்ணட்டுமா? என்று கேட்டார்கள்.

அவர்களிடமெல்லாம் அவன் கண்டிப்பாகச் சொல்லி விட்டான்: ‘இன்னும் மூன்று வருஷங்களுக்கு அந்தப் பேச்சே வேண்டாம். பிறவிப்பெருமாள் பத்தாவது தேறி, ஒரு வேலை ஒப்புக்கொண்டு, சம்பளம் வாங்க ஆரம்பித்த பிறகுதான் என் கல்யாணம் பற்றி நான் யோசிக்க முடியும்!’

இவனிடம் யார் பேசுவார்கள் என்று சமூகத்தின் பெரிய மனிதர்கள் ஒதுங்கி விட்டார்கள்.

‘டவுனுமில்லாத பட்டிக்காடும் இல்லாத, இரண்டுங் கெட்டான் ஊரான’ அவ்வூரில் ஒரு ஹைஸ்கூல் இல்லை. சில மைல்களுக்கு அப்பால் உள்ள நகரத்தில் போய் கல்வி கற்க வேண்டும். ‘அதிகாலையில் எழுந்து குளித்துச் சாப்பிட்டுவிட்டு ‘அன்னக்காவடி’ சுமந்து, ரயிலுக்கு நேரமாகிவிடுமே என்று ஓடி, பிறகு மாலையில்

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/100&oldid=1072863" இலிருந்து மீள்விக்கப்பட்டது