பக்கம்:ஆண் சிங்கம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


அவளுக்கும் அப்படித்தான் இருந்திருக்கவேண்டும். அதனால்தான் அவள் மத்தியான வேளையில், அவன் உணவு உண்ண வருகிற நேரத்தை அறிந்து வாசல்படி மீது ஒரு பொம்மை போலவோ, ஜன்னலுக்குப் பின் ஒரு சந்திரபிம்பம் போலவோ காட்சிதரக் கற்றுக் கொண்டாள். மாலை வேளைகளில் அவள் அழகாகத் தலையைப் பின்னிக்கொண்டு பூ முடித்து முக ஒப்பனை செய்து, படிகள்மீது குதித்தும், தெருவில் நின்றும், தண்ணீர் எடுத்தும் பொழுது போக்குகிறபோது அவன் ஒரு நாளேனும் தன்னைக் கண்டு களிப்பதற்கு வாய்ப்பு இல்லாது போயிற்றே என அவள் உள்ளம் வருந்துவது உண்டு. அவள் எண்ணம் வலுபெற்று, எண்ணியவாறே நடக்கும் விதத்தில் அவளை ஈர்த்திடும் சக்தி அடைந்தது போலும்!

ஒருநாள் ராமலிங்கம் மாலை நேரத்தில் அந்த வழியாக வந்தான். அன்று அவனுக்கு ஒய்வுநாள். அவள் அன்று சொக்கழகுப் பதுமையாக நின்று கொண்டிருந்தாள். எதிர்பாராதவாறு இருவருக்கும் காட்சி இனிமை கிட்டியதில் அளவிலா உவகைதான். அவள் பெயர் பத்மா என்று அறிந்து கொள்ள முடிந்ததில் அவனுக்கு அளப்பரிய ஆனந்தம்.

’ஏ பத்மா...ஏட்டி இங்கே வா... கூப்பிடக்கூப்பிட ஏன்னு கேளாமே அப்படி அங்கே என்னதான் செஞ்சுக்கிட்டு இருக்கியோ? என்று அவள் தாய் வீட்டுக்குள்ளிருந்து பெருங் குரல் எடுத்துக் குறை பாடியது, தெருவில் வந்தவனின் காதிலும் விழுந்தது. அவன் கடந்து செல்கிற வரை, அவள் அங்கேயே நின்றாள். அவனை ஒரு பார்வை பார்த்து சொகுசுப் புன்னகையை அன்பளிப்பாகத் தந்துவிட்டு, உள்ளே குதித்து ஒடினாள் பத்மா. –

அந்தப் பார்வையும் புன்சிரிப்பும், அவளது துள்ளலும் பின்னித் தொங்கவிடப்பட்ட கூந்தலின் துவளலும் அவனை ஏதோ இன்பலோகத்துக்கு எடுத்துச் சென்றன. ஒரு கணத்துக்குத்தான். .

மனம் உணர்ச்சிகளை ஊஞ்சலில் ஏற்றி உயர உயர ஆட்டினாலும், கனவுத் தொட்டிலிட்டு ஆசைகளை

100