பக்கம்:ஆண் சிங்கம்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்அப்புறம் அவர் ஏன் என்னிடம் பொடி வாங்கும் வேலை யைத் தரப்போகிறார்?

இதை உவகையோடு சொல்லிவிட்டு, குலுங்கக் குலுங்கச் சிரிப்பார் சிங்காரம் பிள்ளை. இதுபோல் எத்தனையோ ரசமான அனுபவங்களைச் சிருஷ்டித்து, வாழ்ந்து, மகிழ்ந்தவர் அவர்.

பல கலகங்களை முன்னின்று நடத்தியவர் பிள்ளை. அநேக கலகங்களை அடக்கிய பெருமையும் அவருக்கு உண்டு. அந்த ஊர் ரெளடிகளில் ‘முடி சூடா மன்னர்’ அவர். அவரது ஆற்றலையும், செல்வாக்கையும், அடாவடித்தனத்தையும், முரட்டுத் துணிச்சலையும் அறிந்து, அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் ரெளடிகள் அனைவரும். அவ்வப்போது அவருக்கு பயந்து, மரியாதை செலுத்தவும் அவர்கள் தவறுவதில்லை. அண்ணாச்சி', ‘நம்ம அண்ணாச்சியா பிள்ளை’ என்றுதான் அவர்கள் அவரைக் குறிப்பிடுவது வழக்கம்.

அன்று சிங்காரம் பிள்ளை அண்ணாச்சி ஜாலியாகக் கிளம்பினார், வீர தீரச் செயல்கள் புரிய வேண்டும் என்ற துறு துறுப்போடு புறப்படுகிற காவிய காலத்து ஹீரோ போல!

வழியில் ஒரு பஸ் குறுக்கிட்டது. பிள்ளை மிடுக்காகக் கையைத் தூக்கிக் கீழே போட்டார். காரோட்டி பஸ்ஸின் வேகத்தைக் குறைத்தபோதே – கார் நிற்பதற்கு முந்தியே – சிங்காரம் பிள்ளை ஒரு ஜம்ப் கொடுத்து, பஸ்ஸினுள் பாய்ந்து, ஜம்மென்று உட்கார்ந்தார் ஒரு ஸீட்டிலே அவருக்கு நாற்பது வயசுக்கு அதிகமாகவே இருக்கும். ஆயினும் அவர் உடலோ, தோற்றமோ, செயல்களோ வயசின் மிகுதியைக் காட்டுவதில்லை. துள்ளலும், துடிப்பும் மிகுந்த காளையாகத்தான் திகழ்ந்தார் அவர்.

பஸ் வேகம் பெற்றது. ‘ஸார் டிக்கட்!’ என்று மரியாதையோடு கண்டக்டர், பிள்ளையை அணுகினார். சிங்காரம் பிள்ளையின் அலட்சியமான பார்வை அந்த ஆளை எடை போடுவது போல் மேலும் கீழும் ஓடியது.

109