பக்கம்:ஆண் சிங்கம்.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


‘சொள்ளமுத்து’ என்றும் ஒரு பெயரை அவருக்குச் சூட்டியிருந்தார்கள் பலர்.

இப் பெயர்களெல்லாம் அவருக்குப் பொருந்தும் போலும் என்று தோன்றும், கிருஷ்ண பிள்ளையின் நட வடிக்கைகளைக் கவனிக்கிறவர்களுக்கு.

வீதி வழியே – நாகரிகம் வேகமாக அலை புரளும் பெரிய ரஸ்தாக்களாயினும் சரி; ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத சிறு தெருவாயினும் சரி; தேனீக்கள் மொய்ப்பது போல் ஜனங்கள் முட்டி மோதி ஆய்ந்து கொண்டிருக்கும் சந்து பொத்துகளாயினும் சரியே. எந்த இடமாயினும், எந்த நேரத்திலெனினும் – அவர் நடந்து போகிறபோது, அவரது கண்களில் தனி ஒளி சுடரிட, உதடுகள் சிறு சிரிப்பால் நெளிய, முகமே தன் னிறைவாலும் ஒருவித ஆனந்தத்தினாலும் பிரகாசிக்க (அல்லது அசடு வழிய) அவரே ஒரு வேடிக்கைப் பொருளாகக் காட்சியளிப்பார். அவரை அப்படிப் பார்க்க நேரிடுகிறவர்கள் ‘பைத்தியம் போலிருக்கு!’ என்று எண்ணாதிருக்க இயலாது. அவர்கள் என்ன கண்டார்கள், கிருஷ்ண பிள்ளை அந்நேரத்தில் கவிதா மயமான தனியொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிருர்; ஸ்துாலமான இந்த உலகிலே அவர் உள்ளம் நிலை பெற்றிருக்கவில்லை என்பதை?

மினுமினுக்கும் உடலும், டக் டக் என்று மிடுக்கான ஒலி எழுப்பும் நடையும், கம்பீரத் தோற்றமுமாய் தகதகக்கும் புரவி மிது ஜம்மென வீற்றிருக்கிறார், வேறே யாரு? நம்ம கிருஷ்ண பிள்ளைதான். வீதி வழிப் போவோர், வீட்டு வாசலில் நிற்போர், சாளரத்தின் பின் சந்திர உதயம் சித்திரிப்பவர்கள் எல்லோரும் அவர் உலா வருகிற நேர்த்தியிலே கண்ணை மிதக்கவிட்டு, மனசை அவர்பின் போகவிட்டு உணர்ச்சி வசப்பட்டு நிற்கிறார்கள். ‘மச்சு வீட்டுச் சன்னலின் பின் – அச்சடிச்ச பிக்சரென– வந்தாளே ஒருத்தி – நின்று பார்த்தாளே அவளும்! என்று அவர் உள்ளம் கவிதை செய்ய முயல்கிறது. அவர்மீது அவள் காதல் கொண்டு விடுகிறாள். பார்க்கப் போனல் எல்லா அழகிகளும் அவர் மீது காதல் கொண்டிருக்கிறார்கள்.

118