பக்கம்:ஆண் சிங்கம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

என்கிறார்கள். நாகரீக வளர்ச்சி, சமுதாய அபிவிருத்தி, கலைகள் எல்லாம் மூளையினால் தோன்றியவை. சரிதான், அசுரசக்தி ஒன்று ஏதோ மாயம் பண்ணி விடுகிறது. மனித இனம் மூளையை இழந்துவிடுகிறது. அதாவது ஆறாவது அறிவு அவுட்! அப்புறம், இந்த ஊர் எப்படி இருக்கும்? இந்த உலகம் என்ன ஆகும்? மனித ஜாதி எவ்வாறு நடந்து கொள்ளும்?

அவன் மனத்தறியிலே தாறுமாருன கற்பனைப் பின்னல்கள் நெசவாகின்றன. அவன் சிரிக்கிறான். குதித்தோடும் சிற்றோடையின் களங்கமற்ற கலகல ஒலி எற்றிச் சிரிக்கிறான் கைலாசம்.

விந்தை மனம் பெற்ற கைலாசத்துக்கு கடலோரம் நல்ல அரங்கமாக அமைகிறது. அவன் உள்ளத்திலே அதிசயக் கற்பனைகளைப் பிறப்பிக்கும் அற்புதமாக விளங்குகிறது கடல்.

–இயற்கையின் வீணத்தனத்தைச் சுட்டிக் காட்டுவது போல் விரிந்து கிடக்கிறது நெடுங்கடல், பயனற்ற தண்ணிர்க்காடு. பார்ப்பதற்கு அழகாகவும் கம்பீர மாகவும் இருக்கிறது இன்னும் அழகானதாக அமைய முடியும் இது. பொங்கிப் பாய்ந்து வருகின்ற ஒவ்வொரு அலையும் ஒருவித வர்ணம் பெற்று வந்தால்? மணல் மீது சாடி வெண்நுரைத் துகள்களாகச் சிதறும் அலைக் கூட்டமெல்லாம் வானவில்லின் வர்ணஜாலங்களோடு பளிச்சிட்டால்?

அப்படி ஒரு அற்புதம் இயற்கையிலேயே நிகழக் கூடுமானால் எவ்வளவு மனேகரமாக இருக்கும்! இதை எண்ணி எண்ணி மகிழ்வான் அவன்.

கடல் சிலசமயம் சலனமற்ற கரும் பரப்பாகக் காட்சி தருகிறது புதுமையான நிகழ்ச்சிகளுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள களம்போல் திகழும் அதன் மீது என்ன காட்சி மலர்ந்தால் மிக அழகாக இருக்கும்? கைலாசத்தின் மனம் கற்பனை அலைகளை ஒன்றின்பின் ஒன்றாக எற்றுகிறது.

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்_சிங்கம்.pdf/43&oldid=1071251" இலிருந்து மீள்விக்கப்பட்டது