பக்கம்:ஆண் சிங்கம்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆண் சிங்கம்

அவனுக்குக் கடல்மீது அடங்காத மோகம் ஏற்பட் டிருந்தது. முன்னேறி வரும் அலைகளையே, கவனித்துக் கொண்டிருப்பதில் தணியாத ஆசை வளர்ந்து வந்தது.

திடீரென்று இயற்கைக்கு வெறிபிடித்துவிட்டது போல் தோன்றியது. மூன்று நாட்களாக ஒரே மழை. வானம் அழுக்குப் போர்வையால் போர்த்தப்பட்டது போல் காட்சி அளித்தது. குளிர் காற்று வீசியது. சில சமயங்களில் அதன் வேகம் வலுத்தது. எந்த நேரத்திலும் அது சூறாவளியாக மாறலாம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. விானத்திலே இவ்வளவு தண்ணீரும் எங்கே இருந்தது, எப்படித் தங்கியிருந்தது என்று அதிசயிக்கத் தூண்டும் வகையில் மழை கொட்டு கொட்டு என்று கொட்டியது.

மழையில் நனைவதில் கைலாசம் உற்சாகம் அடைந் தான். கொட்டும் மழையில், சுழலும் காற்றில் கடல் எப்படிக் காட்சி அளிக்கிறது என்று காண்பதில் அவன் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டான்.

கடல் கோர தாண்டவம் புரிந்து கொண்டிருந்தது. இரவு நெருங்க நெருங்க அதன் கூத்தின் பேய்த்தனம் வலுத்துக்கொண்டிருந்தது.

கடலோரத்தில் சிறுசிறு குடிசைகளில் வசித்துவந்த மீனவர்கள் பயந்தார்கள். கடல் எந்த வேளையிலும் பொங்கி விடக்கூடும் என்று அஞ்சி, அவர்கள் தங்க ளுடைய வலைகளையும் இதர சாமான்களையும் மேட்டு நிலத்தில் கொண்டு சேர்த்தார்கள்; ஒடிஓடி, அவசரம் அவசரமாக உழைத்தார்கள். அவர்களைக் கவனித்த கைலாசம் பயப்படவில்லை. கவலை கொள்ளவில்லை. தனது கனவு பலிக்கக்கூடிய காலம் நெருங்கிவருகிறது போலும் என்று சந்தோஷமே கொண்டான்.

இருட்டிய பிறகுகூட அவன் வெகுநேரம் வரை கடற்கரையிலேயே நின்று, வெறித்தனமாகச் சாடுகின்ற அலைகளைக் கவனித்து மகிழ்ந்தான்.

45