பக்கம்:ஆண் சிங்கம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்

– அலைகள் கட்டிடங்கள்மீது மோதுகின்றன. சந்து பொந்துகளில் எல்லாம் பிரவாகித்துப் பாய்கின்றன. பொருள்களைச் சூறையாடுகின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகளை எல்லாம் அள்ளி எடுத்து அம்மானை ஆடி அணைத்துச் சுழற்றி விழுங்கி வீசி அடித்துத் தள்ளி விட்டெறிந்து...

ஆகா! பயங்கர அற்புதம்! அற்புதமான பயங்கர அனுபவம்...

அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பும் பயங்கரமாகத்தான் ஒலித்தது அந்த இடத்திலே. அவ்வேளையிலே!

நள்ளிரவு. கன்னக் கனிந்த கருக்கிருட்டு. வேளையும் பொழுதும் தெரியாத நேரம்.

மழை பெய்துகொண்டே யிருக்கிறது. சோ... ஓயாத ஒற்றை ஒசை...

காற்று ‘உய்ய்–உய்ய்’ என்று சுழன்றடிக்கிறது...

துரங்கிக்கொண்டிருந்த கைலாசம் திடுக்கிட்டு விழித்தான். ஒரு ஒசை அவன் காதில் விழுந்தது. கனத்த அழுத்தமான ஒசை... ஆயிரம் யானைகள் திம்திம்மென்று அடிபெயர்த்து வைத்து வெறி வேகத் தோடு முன்னேறுவது போல... குதிரைப் படை காற்றினும் கடிதாய் முன் பாய்ந்து வருவது போல... நெருங்குகிறது. அடி அடியாக முன்னேறி வருகிறது.

அவன் உள்ளத்தில் ஒரு துடிப்பு: உணர்ச்சிப் பரபரப்பு... அவனுள் இனம் தெரியாத ஒரு குழப்பம். பீதியும்கூட.

அவன் படுக்கையிலிருந்து பதறி எழுந்தான். போர்வை கால்களில் சுற்றியது. உதறி அதை விலக்கி விட்டு அவன் வேகமாகப் பாய்ந்தான். அவன் நெற்றி சுவரில் மோதியது பலமாக ஆயினும், அந்த ஓசை – அலைகளின் அழுத்தமான ஒசை – காதுக்ளில் ஒப்பற்ற இசைபோல் ஒலித்தது.

46