பக்கம்:ஆண் சிங்கம்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


‘ஏட்டி, இவ்வளவு நேரமா எங்கட்டீ போயிருந்தே? என்றாள் ஆத்தை. சும்மா ஒப்புக்கு விசாரித்த பேச்சு. பதில் எதிர்பார்க்கப் படவுமில்லை. அவள் சொல்லித்தான் தீரனும் என்கிற அவசியமும் இல்லை. ஆகவே, வள்ளி சும்மா சிரித்து வைத்தாள்.

பெரியவர்கள் பேச்சு சுவாரஸ்யமாகத் தொடர ஆரம்பித்தது.

‘நீ சொல்றதும் சரிதான். ஊரிலே, உலகத்திலே என்னென்னவோ நடக்குது. நமக்குத் தெரியாமே எவ் வளவோ நடக்குது, எல்லாமா நமக்குத் தெரிஞ்சிருது? இல்லே, தெரிகிறதாத் தோணுற எல்லாம் நமக்குப் புரிஞ்சிருதா? என்றாள் அம்மா.

‘ஆமா’ என்று வள்ளி அம்மை ஒற்றைச் சொல் உதிர்த்தாள்.

‘என்னடி அது?’ என்று அவள் பக்கம் பார்த்தாள் தாய்.

‘தெரியாமலே எவ்வளவோ நடக்குதுன்னியே, அதுக்கு ஆமான்னேன்’ என்றாள் வள்ளி.

“முளைச்சு மூணு இலை குத்தலே. அதுக்குள்ளே இவ பெரிய மனுஷி மாதிரித்தான்–எல்லார் பேச்சிலேயும் தலையிட்டுக்கிட்டு... என்று அத்தை குறைகூறினள்.

வள்ளி அம்மை தானகவே சிரித்துக்கொண்டாள். அதன் பொருள் பெரியவர்களுக்கு விளங்க வேண்டும் என்ற ஆசை, அன்றையப் பொழுதுக்கு, அவளுக்கு இல்லை. அப்புறம் எப்படியோ!

*
62