பக்கம்:ஆண் சிங்கம்.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வல்லிக்கண்ணன்


– ‘டாரன்ச்சலா’ என்ற இனத்துப் பூச்சி பற்றி அவன் அறிந்தது முதல், சிதம்பரத்தின் மனப்பித்து மோசமான நிலை எய்தியது...

டாரன்ச்சலா இனச் சிலந்தி பெரியது; மயிர் செறிந்தது. விகார உருவம் பெற்ற இது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் விஷம் உடையதல்ல. இத்தாலியிலும் ஐரோப்பாவின் வேறு சில நாடுகளிலும் காணப்படுகிற இந்தச் சிலந்தியால் கஷ்டப்படுகிறவர்களுக்கு நாட்டியம் ஆட வேண்டும் என்ற வெறி பிறக்குமாம். அவர்கள் அந்த உணர்வு தீருகிறவரை வெறியாட்டு ஆடவேண்டியதுதான். ..

சிதம்பரம் இந்த இனச் சிலந்தியை நேரில் காணும் வாய்ப்பு பெற்றவனல்ல. அதன் படத்தை மட்டுமே கண்டிருந்தான். ஆயினும் டாரன்ச்சலா அவன் மூளை யில் ஒரு பகுதியில் குடியேறிவிட்டது!

அந்தப் பெருஞ் சிலந்தி அவனைக் கடித்துவிட்டது போலவும், ‘ஆடு! எழுந்து குதித்து, கூத்தாடுடா பயலே!’ என்று உத்திரவிடுவது போலவும் உணர்வு எழும் அவனுக்கு.

ஒன்றிரண்டு தடவைகள் அவன் எழுந்து நின்று ‘திங்கு திங்கென்று’ குதித்துக் கூத்தாடவும் செய்திருக்கிறான். நல்லவேளே! அச்சந்தர்ப்பங்களில் அவன் தனியனாய் தனது அறையிலேயே இருந்தான். வேறு எங்காவது இருந்திருந்தால் அவனுக்குப் பைத்தியம் என்றே மற்றவர்கள் முடிவு கட்டியிருப்பார்கள்.

அவனுக்குப் பைத்தியம்தானா? அல்லது, பைத்தியத்தின் ஆரம்ப நிலையா? பைத்தியத்தின் வித்து விழுந்து, மனம் சிறிது சிறிதாகப் பேதலித்து வரும் தன்மையோ? அறிவு மயக்கமும் தெளிவும் மாறி மாறி வரும் நிலைமையாக இருக்குமோ?

திட்டமாகச் சொல்வதற்கில்லை. எதுவாகவும் இருக்கலாம். எதுவும் இல்லாது, வேறு குழப்பமாக இருந்தாலும் இருந்துவிடலாம். மனித உள்ளத்தின்

சிக்கல்களை யார்தான் எளிதில் விடுவிக்க முடிகிறது?

80