பக்கம்:ஆண் சிங்கம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரக்கம்

நாகரிக நகரின் முக்கிய வீதி ஜன சமுதாயத்தை இழுத்துச் செல்லும் பெரிய நதி மாதிரி விளங்கிக் கொண்டிருந்தது.

வேகம், அவசரம், அர்த்தமற்ற பரபரப்பு, நெருக்கடி எல்லாம் நிறைந்த காட்சி அது. ஸர்வீஸ் பஸ், பிளஷர் கார், ரிக் ஷா ஆட்டோரிக்ஷா, ஜட்கா தள்ளுவண்டி, இழுக்கும் வண்டி, மோட்டார் பைக், சைக்கிள், வேக உருப்பெற்ற நாகரிக சமுதாயம் பலரக வாகனத் தோற்றங்களாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவற்றுக்கிடையே-அவற்றின் அருகே, அப்பாவிகளான நடந்து செல்லும் இனத்தவரும் போய் வந்து கொண்டு தானிருந்தார்கள்.

லாரிகள் யானைகள் போல ஊர்ந்து சென்ற ரஸ்தா விலே, பார வண்டிகளை இழுத்துச் செல்லும் ‘மனித மிருக'ங்களும் அசைந்து அசைந்து முன்னேறிக் கொண் டிருந்தன. சுமக்க முடியாத சுமைகளைத் தலைமீது ஏற்றி, எப்படியோ தாங்கியபடி நடக்கும்-உடலை நெளித்து நெளித்து ஒடும் மனிதப்பிராணிகளும் போய்க்கொண்டிருந்தனர்.

நாகரிகமும் அநாகரிகமும், கலாசாரமும் காட்டு மிராண்டித்தனமும் பகட்டும் வறட்சியும், மேனாமினிக் கித்தனமும் கண்களை அறுக்கும் கோரமும், செல்வ போகமும் தரித்திரக் கொடுமையும், இவ்வாறான முரண் பாடுகள் பலவும்-குறிப்பிட்ட ஏதோ ஒரு நியதிக்கு உட்பட்டது போலவும், குழம்பித் தவித்தும், குழப்ப முறாமல் நெளிந்து சுழித்தும் புரண்டுகொண்டிருந்தன. எல்லாம் கூடி, ‘இதுநகரம்...... நாகரிகப் பெருநகரம்’ என்கிற உண்மையை நித்தியமாய், நிரந்தரமாய், புலப்படுத்திக் கொண்டிருத்தன.

84