பக்கம்:ஆத்திசூடி அமிழ்தம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. ஊக்கமது கைவிடேல்

  ஊக்கமது-முயற்சியை, 
  கைவிடேல்-நீ கைவிடாதே.
      ஒர் உபாத்தியாயரிடத்தில் மணி, அழகன் என்று இரண்டு பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள். மணி ஊக்கம் உடையவன். அழகன் ஆள் அழகனேதவிர காரியத்தில் சோம்பெறி.

         உபாத்தியாயரிடத்தில் ஒர் அழகிய புத்தகம் இருந்தது. இரண்டு பிள்ளைகளும் பார்த்து ஆசைப்பட்டார்கள். சொந்தமாக ஒரு கதை எழுதிக்கொண்டு வருபவனுக்கு இப்புத்தகத்தைப் பரிசாகக் கொடுப்பேன் என்று உபாத்தியாயர் தெரிவித்தார். இருவரும் விட்டிற்குச் சென்று கதையெழுத உட்கார்ந்தார்கள்.
 
    அழகன் எழுதி எழுதிப் பார்த்தான். கதை அமையவில்லை. இந்தக் கதையும் கெட்டது, பரிசும் கெட்டது என்று வெறுத்து எழுந்து விட்டான். மணிக்கும் கதை அமையவில்லை. சோர்ந்து பேணாவைக் கீழே வைத்தான். அப்போது தன் எதிரில், ஒர் எறும் ஒரு நொய்யரிசியை இழுத்துக்கொண்டு போவதைக் கண்டான். விளையாட்டாக எறும்பு வேறாகவும் அரிசி வேறாகவும் பிரித்தான். எறும்பு ஊக்கத்தைக் கைவிடவில்லை. மறுபடியும் அரிசியை இழுத்தது. பார்த்தான் மணி ஆகா ! நாம் பிரித்தும் எறும்பு ஊக்கத்தைக் கைவிடவில்லையே! இந்த எறும்புக்கு குறைந்தவனா நாம்?  கதையை எழுதியே தீர வேண்டும் என்று எண்ணினான். கதை அழகாக அமைந்தது. உபாத்தியாயரிடம் காட்டினன். புத்தகத்தைப் பரிசாகப் பெற்றான். ஊக்கம் கெட்ட அழகன் கண்டு வெட்கப்பட்டான். (ஆகையால்)
  ஊக்கத்தைக் கைவிடலாகாது.


      5. ஐயம் இட்டு உண்

ஐயம் இட்டு -(இல்லை என்று வந்தவருக்குப் ) பிச்சை கொடுத்து விட்டு , உண் -பின்பு நீ சாப்பிடு.

     ஒரு கிராமத்தில் கறுப்பண்ணன் என்று ஒருவன் இருந்தான். அவன் பொல்லாத கருமி. பிச்சைக்காரருக்கு பிச்சையே போடமாட்டான். அவனுக்கு நல்லதம்பி 

என்று ஒரு மகன் இருந்தான். உண்மையில் அவன் நல்ல தம்பிதான். அவன் ஒருவருக்காவது பிச்சைபோட்டு விட்டுத்தான் சாப்பிடுவான். அதற்காக அவனைக் கறுப் பண்ணன் கண்டிப்பான். எப்படியாவது தகப்பனைத் திருத்த வேண்டும் என்று மகன் எண்ணி வந்தான்.

     ஒருநாள் நல்லதம்பி, தன் தகப்பன் எதிரில் காக்கைக்குச் சோறு வைத்தான். ஒரு காக்கை வந்தது.பின்பு எல்லாக் காக்கைகளையும் 'கா கா' என்று கூவி அழைத்தது. பல காக்கைகளும் வந்து சாப்பிட்டன. உடனே மகன் தகப்பனைப் பார்த்து, ஏன் இந்த காக்கை தான் மட்டும்

சாப்பிடாமல் மற்றைய காக்கைகளையும் அழைத்துச் சாப்பிடுகிறது என்று கேட்டான்.

அதற்குத் தகப்பன், அது காக்கைகளுக்கு இருக்கும் நல்ல பழக்கம் என்றான். உடனே மகன், நீங்கள் மட்டும் பிச்சை போடாமல் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். தகப்பன் வெட்கப்பட்டுத் தலை குனிந்தான். அன்று முதல் கறுப்பண்ணன் பிச்சைகாரருக்குப் பிச்சை போட்டுவிட்டே சாப்பிட்டு வந்தான். அதனால் அவனுக்குப் புகழும் புண்ணியமும் கிடைத்தன.( ஆகையால் )
   பிச்சை போட்டுவிட்டுச் சாப்பிட வேண்டும்.