உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்மஜோதி

329

அன்பின் உருவம் - கி. வா. ஜ.


ஆர். கே. சாரி

அறுபது ஆண்டுகள் நிரம்பப்பெறும் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள், கங்கையில் புனிதமான காவேரியின் அருட்கருணையால் வளம் கொழித்துப் பூரிப்புடன் விளங்கும் திருச்சி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராயபுரம் என்னும் திருப்பதியில் 1906 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ஆம் நாள் அவதரித்தார். சோழநாடு ஈன்றெடுத்த ஜகந்நாதனே கொங்குநாடு வளர்த்தது. இன்பகரமான குழந்தைப் பருவத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் ஓடி விளையாடி வளர்ந்த ஜகந்நாதன், குளித்தலை உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். இளைஞர் ஜகந்நாதனிடம் குடிகொண்டிருந்த அறிவுப் பசி, தமிழ் இலக்கியங்களைக் கற்றுணரவேண்டுமென்ற துடிப்பு, ஆர்வம், அவர் முற்பிறப்பில் செய்திருந்தமகத்தான நல்வினை ஆகியவை தமிழ்ப்பெரியார் டாக்டர் உ. வே. சாமிநாதய்யரிடம் அவரைக் கொண்டு சேர்த்தன. 1928 - ஆம் ஆண்டு முதல் ஐயரவர்களின்காலடிகளில் அமர்ந்து பிரதான மாணவராக இருந்துதமிழ் பயின்றார். ஐயரவர்களின் ஏடு தேடு பணி, பதிப்புப்பணி, தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பணி ஆகிய ஒவ்வொரு தமிழ்ப்பணியிலும் உறுதுணையாக இருந்து உதவும் பெரும் பேறும் பெற்றார் ஜகந்நாதன் அவர்கள். ஐயரவர்கள் தாம் பதிப்பித்த நூல்கள் பலவற்றிலும் தமது பதிப்புரையில் “இந்நூல் பதிப்பிக்க உடன் இருந்து உதவிய மோகனூர் தமிழ் வித்வான் சீவி. கி. வா. ஜகந்நாதன் அவர்களுக்கு” நன்றி தெரிவித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஐயரவர்களை ஆலோசனைக் குழுத் தலைவராகக் கொண்டு 1932 -ஆம் ஆண்டு திரு. நாராயணஸ்வாமி அய்யர் அவர்கள் தமிழ் இலக்கிய திங்கள் ஏடு “கலைமகளை“த் துவங்கியவுடன், குருநாதரின் ஆசிகளுடன், அதன் துணை ஆசிரியராகச் சேர்ந்த திரு. ஜகந்நாதன் 1937-ம் ஆண்டு முதல் “கலைமகள்“ ஆசிரியராக இருந்து சிறந்த முறையில் இலக்கியப் பணி ஆற்றி வருகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/11&oldid=1544434" இலிருந்து மீள்விக்கப்பட்டது