உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மஜோதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்மஜோதி

333

கும் அவரது ஆய்வு; சமயத் துறையில் ஊறித் திளைத்த அவரது பக்திப் பாடல்கள்“ — இவை தமிழுக்கு வாய்த்த பேறுகளே ஆகும்.

இத்தனை சிறப்பு இயல்புகள் பொருந்திய பேரறிஞர் 60 ஆண்டுகள் பலனுள்ள பணிபுரிந்து 61-ஆம் ஆண்டின் தலைவாசலில் காலடி எடுத்து வைக்கும் இத் தருணத்தில், நோய் நொடியற்று இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணியும் சமயப்பணியும் புரிய ஆண்டவன் அருள்புரியும் படி வேண்டுகிறேன்.


கி. வா. ஜ. வின் கருத்துக்கள்

தெய்வத்தை “பால்வரை தெய்வம்“ என்று தொல்காப்பியர் சொல்கிறார். இன்ன உயிர் இன்னவாறு இன்ப துன்பங்களை அடைய வேண்டும் என்று ஊழ்வினைக்கு ஏற்பப் பகுத்து வரையறுக்கும் தெய்வம் என்று இதற்குப் பொருள் செய்ய வேண்டும். கடவுளுக்கு வேறு பல தொழில் இருந்தாலும் அவரவர்கள் தகுதி அறிந்து அனுபவத்தைச் சார்த்தும் தொழிலையே சிறப்பாகத் தமிழர் கருதியிருக்க வேண்டும். வேலை செய்தவனுக்குத் தக்கபடி கூலி தரும் செல்வனைப் போல் இறைவன் இருக்கிறான்.

தமிழர் தெளிவாகப் பேசத் தெரிந்தவர்கள். அவர்கள் மொழியில் சொல்லுக்குப் பஞ்சம் இல்லை. இப்போ எத்தனையோ வார்த்தைகளுக்குத் தமிழ் தெரியாமல் இடர்ப்படுகிறோமே என்று சிலர் கேட்கலாம். இந்த நாட்டிலே தோற்றிய பொருள்களுக்கும், இந்த நாட்டிலே எண்ணும் எண்ணத்துக்கும் சொல் இல்லையென்றல் அதுதான் குறைபாடே ஒழிய, இறக்குமதியான சரக்குக்குப் பேர் இல்லையே என்றால் பொருள் இறக்குமதியாகும் போது பெயரும் இறக்குமதியாக வேண்டியதுதான்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/15&oldid=1544438" இலிருந்து மீள்விக்கப்பட்டது