ஆத்மஜோதி
323
பழமைக்கும் புதுமைக்கும்
பாலம் அமைத்த பெரியார்
(ஆசிரியர்)
தமிழ்நூல் கற்ற எவரும் டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்களை அறியாமல் இருக்க முடியாது. அவர்களை அறியாதார் தமிழை அறியாதாரே. இத்தகைய பெருமகனாருக்கு உத்தம மாணாக்கராக இருந்தவர்கள் பிரம்மஸ்ரீ கி. வா. ஜகந்நாத ஐயர் அவர்கள். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் என்னும் திருப்பதியில் 1906 ஆம் ஆண்டு 11ஆம் நாள் அவதரித்தார். கல்லூரிப் படிப்பு முடித்தபின் 22ஆவது வயதில் ஐயர் அவர்களிடம் தமிழ் கற்க ஆரம்பித்தார்கள். ஐயர் அவர்ளிடம் தமிழ் அமுதத்தை மாந்தி தாம் பெற்ற இன்பம் மற்றையோர்களும் பெறச் செய்தார்கள் என்று சொல்வதே பொருந்தும்.
ஐயர் அவர்கள் தமிழ்ப்பணி செய்தார்கள் என்றால் அதற்கு அச்சாணியாக இருந்தவர்கள் கி.வா.ஜ. என்றே கூறலாம். ஏடுகளைப் பிரதி பண்ணுதல், ஒப்பு நோக்குதல் முதலாம் கருமங்களில் உறுதுணையாக இருந்து பெருந்தொண்டாற்றினர்கள். கி. வா. ஜ. அவர்கள் இலக்கியத் துறையில் தொடாத பொருள் இல்லை என்றே சொல்லலாம். நாள் ஒன்றுக்கு ஒரு நூல் எழுதும் வல்லமை படைத்தவர்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு நூல் என்றால் எல்லார்க்கும் ஒரு பயம். செய்யுளை வாசித்தால் விளங்காது, அவற்றுக்கு அமைந்த உரைகளோ செய்யுளை விட மிகக் கடினம். இந்த இலட்சணத்திலே சங்க நூல் என்றால் அவற்றை நாம் இப்பிறப்பிலே படித்து அறிய முடியாத ஒன்று என்று பலரும் கருதி இருந்தார்கள்.
கி. வா. ஜ. அவர்கள் சங்க நூற் காட்சிகளை எழுதத் தொடங்கினர்கள். வெறுப்புக் கொண்டிருந்தவர்கள் சங்க இலக்கியங்களை விரும்பிப் படிக்கத் தொடங்கினார்கள். பயப்படாதீர்கள் என்றொரு புத்தகம் எழுதினார்கள். பயந்திருந்தவர்கள் எல்லாரும் அதைப் படித்தபின் தமிழ் படிக்கவும் பேசவும் தைரியமாக முன்வந்தார்கள்.