பக்கம்:ஆத்மஜோதி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆத்மஜோதி

325

பெற்ற கலைமகள் பத்திரிகைக்குக் கடந்த கால் நூற்றாண்டாக ஆசிரியராக அமர்ந்து தமிழ்த் தொண்டாற்றி வருபவர்கள் கி. வா. ஜ. அவர்கள். இலக்கியம், சிறுகதை, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலுமே சிறந்து விளங்குவதை அறியலாம். மஞ்சரியில் வரும் கட்டுரைகள் கொண்டு அவரது பன்மொழிப் புலமையும் பலகலை அறிவும் விளங்கக் கிடக்கின்றன. அவர்களுடைய ஆராய்ச்சித் திறனை விளக்க திருக்குறள் உரை வளம் ஒன்றே போதியது. இதுவரை அவருடைய பெயரால் 120 நூல்களுக்கு மேல் வெளி வந்துள்ளன. இவரது சிறுகதைகள் 11 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

இவரது தமிழ்த் தொண்டிலும் தமிழ் இனிமையிலும் தமது உள்ளத்தைப் பறிகொடுத்த மகான்களும் சங்கங்களும் இவரைப் பாராட்டு முகமாகப் பல பட்டங்களைக் கொடுத்துள்ளனர். திருமுருகாற்றுப்படை அரசு, வாகீச கலாநிதி, தமிழ்க்கவி பூஷணம், செந்தமிழ்ச் செல்வர், திருநெறித் தவமணி, தமிழ்ப் பெரும் புலவர். இப்பட்டங்களைத் தவிரச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் 'வித்துவான்’ எம். ஏ. என்ற பட்டங்களையும் பெற்றவர்கள். இவ்வளவு பட்டங்களைப் பெற்றிருந்தும் அவர்கள் இப்பட்டங்களைக் கூறுவதனால் பெருமை கொள்வதில்லை. தமிழ் கூறும் நல்லுலகத்தில் உள்ளவர்களுக்கும் கி.வா.ஜ. என்றாலே இவ்வளவு பட்டங்களும் பெருமையும் அவர்களது உள்ளத்தில் தெற்றெனப் புலப்படும்.

எழுத்துத்துறையில் எத்தகைய வல்லுனரோ பேச்சுத் துறையிலும் அத்தகைய வல்லுனராவர். எழுத்துத் துறையிலும் பேச்சுத் துறையிலும் மக்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பவரே தவிர மக்கள் விரும்புகிறவற்றைக் கொடுப்பவரல்ல. மக்கள் விரும்புகிறார்களே என்று சில பத்திரிகைகள் கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. அவற்றுக்கு அணுவேனும் இடம்கொடாது, வாழ்க்கையின் முக்கிய நோக்கம் பூரணப்படுதல் ஒன்றையே கருத்தில் கொண்டு எழுத்துமூலமும் பேச்சுமூலமும் பெரும் பணி ஆற்றி வருகின்றார்கள். அவரது பேச்சிற்கு அடிமையாகித் தமது வாழ்க்கையையே முற்றாக மாற்றிக் கொண்டவர்கள் எத்தனையோ பேர்.

அறிஞர் ஒருவர் குறிப்பிட்டபடி “ஆழ்ந்த அவரது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆத்மஜோதி.pdf/8&oldid=1544431" இலிருந்து மீள்விக்கப்பட்டது