12 ஆத்மாவின் ராகங்கள் பொது வாழ்க்கைக்கும் நீ எவ்வளவோ நல்லது செய்யலாம்' என்று எனக்கு அறிவுரை கூறி, என்னை இந்தத் துறைக்கு அனுப்பி வைத்தவரே காந்திராமன் தான். குடும்ப விஷயத்திலும் சரி, பொது விஷயங்களிலும் சரி, நேரிலோ கடித மூலமோ நான் அவரைக் கேட்காமல் எந்த முடிவும் செய்ததில்லை. எந்தக் காரியத்திலும் இறங்கியதில்லை.
அப்படி ஒரு வழிகாட்டி இனிமேல் எனக்கு இல்லை என்பதை மனம் ஒப்பி அங்கீகரித்துக் கொள்வது வேதனையாகத் தான் இருந்தது. மனிதனால் லாபத்தை அங்கீகரித்துக் கொள்ள முடிவது போல் இழப்பை அத்தனை சுலபமாக அங்கீகரித்து ஒப்புக் கொண்டு விட முடிவதில்லையே. கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக எனக்கு இருந்த ஒரு மகோந்நதமான துணை போய்விட்டது; எனக்கு மட்டுமில்லை; தேசத்துக்கும் தான். குருவையும், தெய்வத்தையும் தேடிக் கண்டுபிடிக்கிறவரை சராசரி இந்தியனின் வாழ்க்கை நிறைவதில்லை என்று நம்புகிறவன் நான். பன்னூறு யுகங்களாக இந்திய வாழ்க்கை வழிகாட்டுவதற்காகத் தகுதி வாய்ந்த ஒருவரைத் தேடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. தனி மனிதனாக இந்தியனுக்கும் சரி, சமூகத்துக்கும் சரி, இது பொருந்துகிறது. ஒரு சமயத்தில் புத்தர் கிடைத்தார்; அப்புறம் கடைசியாக மகாத்மா காந்தி, எனக்குக் காந்திராமன் - எல்லாரும் இப்படித்தான் கிடைத்திருக்கிறார்கள். காந்தியைக் குருவாகக் கொண்டு காந்திராமனும், காந்திராமனைக் குருவாகக் கொண்டு நானும், இந்தத் தலைமுறையினரும் வாழ்ந்திருக்கிறோம். இந்திய வாழ்க்கையோடு கங்கை நதியையும், இமயமலையையும் போல் குருவும் - குரு பரம்பரைத் தத்துவமும், எவ்வளவு அழகாகப் பிணைந்திருக்கின்றன என்றெண்ணிய போது மெய்சிலிர்த்தது எனக்கு. , , , . . ." -
நானறிய, சென்ற நூற்றாண்டு இந்தியன் ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்தான். இந்த நூற்றாண்டு இந்தியன் மனத்தைப் பெரிதாக மதித்து வாழ்கிறான்.