பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 ஆத்மாவின் ராகங்கள்

மறு வாரமே ராஜாராமனும், முத்திருளப்பனும், கலெக்டர் ஆபீஸ் முன்பு மறியல் செய்து கைதானார்கள். மதுரத்துக்கோ, பத்தருக்கோ, பிருகதீஸ்வரனுக்கோ தெரிந்தால் ஒருவேளை அவர்கள் தங்களைத் தடுக்கக் கூடும் என்று மறியல் விஷயத்தை அவர்கள் முன்கூட்டியே யாருக்கும் தெரியவிடவில்லை. இருவரும் கைதான பின்பே மற்றவர்களுக்கு அச் செய்தி தெரிந்தது. திருச்சி ஜெயிலில் கடுமையான குவாரன்டைன் பிளாக் அவர்களுக்குக் கிடைத்தது. -

அப்போது அவர்களோடு திருச்சி சிறையில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார், சர்தார் வேதரத்தினம், வி.வி. கிரி, டி.எஸ். அவினாசிலிங்கம், சுப்பராயன், அனந்த சயனம், பக்தவத்சலம் போன்ற தலைவர்களும் இருந்தனர். அவன் திருச்சிக்கு வந்த இரண்டு வாரங்களுக்குப் பின், தனபாக்கியம் காலமாகிவிட்ட செய்தியைப் பிருகதீஸ்வரன் தந்தி மூலம் மதுரையிலிருந்து தெரிவித்தார். மதுரம் என்ன வேதனைப்படுவாள் என்பதை அவனால் கற்பனையே செய்ய முடியாமலிருந்தது. பிருகதீஸ்வரனும், பத்தரும், அவளுக்குத் துணையாயிருந்து ஆறுதல் கூறுவார்கள் என்றாலும், அவள் மனம் தான் இல்லாத தனிமையை எப்படி எப்படி உணரும் என்றெண்ணிய போது அவனுக்கு மிக மிக வேதனையாயிருந்தது. அவன், மதுரத்துக்குக் காண்பித்து ஆறுதல் கூறும்படி சிறையிலிருந்து பிருகதீஸ்வரனுக்கு உடனே ஒரு கடிதம் எழுதினான். எவ்வளவோ பரிவாகவும், கனிவாகவும் எழுதியும் கூட, அந்தக் கடிதமே தான் அப்போது அருகில் இல்லாத குறையைப் போக்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்குமென ராஜாராமனால் நம்ப முடியவில்லை. தான் முதலில் நினைத்திருந்ததற்கு மாறாகத் தனபாக்கியம் மிகமிக நல்ல மனமுள்ளவளாகப் பழகிய பின்பு இப்போது அவளுடைய மரணம் அவன் மனத்தைக் கலங்கச் செய்தது. ஜமீன்தாருடைய மரணத்துக்குப் பின்னே அவள் தளர்ந்து விட்டாள் என்று தோன்றினாலும், அவள் இன்னும் சிறிது காலம் உயிர் வாழ்ந்திருந்தால் மதுரத்துக்குப் பெரிதும் ஆறுதலாயிருக்கும் எனத் தோன்றியது.